Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/மாணவர்களுக்கு கதை சொல்லும் பயிற்சி; 16 வயது மாணவியின் பலே முயற்சி

மாணவர்களுக்கு கதை சொல்லும் பயிற்சி; 16 வயது மாணவியின் பலே முயற்சி

மாணவர்களுக்கு கதை சொல்லும் பயிற்சி; 16 வயது மாணவியின் பலே முயற்சி

மாணவர்களுக்கு கதை சொல்லும் பயிற்சி; 16 வயது மாணவியின் பலே முயற்சி

UPDATED : மார் 24, 2025 08:10 AMADDED : மார் 24, 2025 05:12 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு கப்பன் பூங்காவில் ஞாயிற்றுகிழமை தோறும் காலை 6:30 மணி அளவில் எட்டு முதல் பத்து மாணவ - மாணவியர் காகிதத்தில் ஏதோ எழுதி கொண்டிருந்தனர். அவர்களின் மத்தியில் 16 வயது சிறுமி, அவர்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

நானும் ஏதோ பாடம் சொல்லித் தருகிறார், அல்லது ஓவியம் வரைய கற்றுக் கொடுக்கிறார் என்று நினைத்தேன். ஆனால், மாணவர்கள் பத்தி, பத்தியாக எழுதி கொண்டிருந்தனர்.

ஆர்வத்துடன், அந்த 16 வயது சிறுமியிடம் கேட்டேன். மாணவர்கள் அனைவரும் கதை எழுதுகின்றனர் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அனைவரும் பள்ளி, கல்லுாரி படிப்பு முடித்தவுடன், நாளிதழ்கள், மேகசின்களுக்கும், சிலர் திரைப்படங்களுக்கும் கதை எழுதுவர். ஆனால் இவர்கள் இப்போதே கதை எழுதுவது எனக்கு மேலும் ஆர்வத்தை துாண்டியது.

அம்மாணவியிடம் கேட்டபோது, அவர் பெயர் விதி கோல்சா என்றும், தி இன்டர்நேஷனல் பள்ளி மாணவி என்பதும் தெரியவந்தது.

அம்மாணவி மேலும் கூறியதாவது:

எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இதன் மூலம் உலகை புரிந்து கொள்ள முடிகிறது. சிறு வயதில் இருந்தே புத்தகம் படிக்க துவங்கினேன். 2021ல் 'இளம் தொழில்முனைவோர் அகாடமி'யின் இன்டர்நேஷனல் படிப்பில் சேர்ந்தேன்.

ஆன்லைனில் இந்த பாடத் திட்டத்தில் பங்கேற்றேன். இதில் தயாரிப்பு மேம்பாடு என்ற திட்டம் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எழுத்து மூலம் நான் விரும்பும் கருத்தை பதிவு செய்ய துவங்கினேன்.

இதில் நடத்திய தேர்வில் என்னுடைய எழுத்தில் உருவான கதைக்கு, மூன்றாம் பரிசு கிடைத்தது. இது எனக்கு மேலும் ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்தது. இந்த பரிசு மூலம் கிடைத்த பணத்தில், 'கிளவர் பாக்ஸ்' என்ற இணையதளத்தை உருவாக்கினேன்.

அரசு சாரா அமைப்புகளான குளோபல் கன்சர்ன் இந்தியா மற்றும் பரிணாம் பவுண்டேஷன் இணைந்து கப்பன் பூங்கா உட்பட பல இடங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன்.

இம்மாணவர்களுக்கு ஏராளமான திறமைகள் உள்ளன. தங்கள் திறமையை வெளிப்படுத்த, அவர்களுக்கு தளம் மட்டுமே தேவைப்பட்டது. அதற்கான தளமாக நான் இருக்கிறேன்.

இவர்கள், பெங்களூரு லட்சுமண் ராவ் நகர் குடிசை பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களின் கற்பனையில் உருவாகும் கதைகள் ஒவ்வொன்றும், நமக்கே வித்தியாசமாகவும், புதிய அனுபவமாக இருக்கும். கதை எழுத தேவையான, 'கதை அறிமுகம், எழுச்சி ஊட்டும் செயல், உச்சகட்டம், வீழ்ச்சி, தீர்மானம்' ஆகும். இந்த ஐந்து கோட்பாடுகள் தான், கதையின் கட்டமைப்பை உருவாக்குகிறது.

இந்த சிக்கலான கோட்பாடுகள், தனியார் பள்ளிகளில், எட்டாம் வகுப்பில் தான் சொல்லித்தருவர். இதையே குழந்தைகளுக்கு எளிதாக புரியும் வகையில் எளிமையாக்கி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விதி கோல்சா பற்றி தெரிந்து கொள்ள, @cleverbox.club. என்ற இன்ஸ்ட்கிராமில் சென்று பார்க்கலாம்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us