Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ பழங்குடியினருக்கு சேவை செய்யும் 12ம் வகுப்பு மாணவி

 பழங்குடியினருக்கு சேவை செய்யும் 12ம் வகுப்பு மாணவி

 பழங்குடியினருக்கு சேவை செய்யும் 12ம் வகுப்பு மாணவி

 பழங்குடியினருக்கு சேவை செய்யும் 12ம் வகுப்பு மாணவி

ADDED : டிச 01, 2025 06:02 AM


Google News
Latest Tamil News
- நமது நிருபர் -: கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியர் பலருக்கு, தங்களின் நலனில் மட்டுமே அக்கறை இருக்கும். படிப்பை முடித்து, என்ன வேலைக்கு செல்ல வேண்டும். எதிர்காலத்தை எப்படி வளமாக்க வேண்டும் என, சிந்தித்து செயல்படுவர். சிலருக்கு படிப்புடன், சமூகத்தின் மீதும், அக்கறை இருக்கும். அவர்களில் நிஹாரிகா நாயரும் ஒருவர்.

பெங்களூரின் ஏக்யா கல்லுாரியில் 12ம் வகுப்பு படிப்பவர் நிஹாரிகா, 18. இவர் படிப்பில் ஆர்வம் காட்டுவதுடன், பழங்குடியினர் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளார். வெளிச்சத்துக்கே வராத பல சமுதாயங்கள் உள்ளன. இத்தகைய சமுதாயங்களை அடையாளம் காண்கிறார். அவர்களின் உரிமைகள் மீறப்படுவது தெரிந்தால், அதை சரி செய்கிறார்.

பாரம்பரியம் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்களை சந்தித்துள்ளார். அரசு அலுவலகங்களில் அவர்களுக்கு தேவையான ஆவணங்களை பெற உதவுகிறார். அவர்கள் வசிக்கும் காலனிகளில், மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்கிறார்.

அவர்களின் பாரம்பரியம், கலாசாரம் குறித்து, ஆய்வு செய்கிறார். அவர்களின் உரிமைகளை பாதுகாத்து கொள்வது தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

இது தொடர்பாக, நிஹாரிகா கூறியதாவது:

நான் வனப்பகுதி கிராமங்களுக்கு சென்றுள்ளேன். அவர்களை பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்ற முயற்சி நடக்கிறது. நில மாபியாவினரால் பிரச்னையை சந்திக்கின்றனர். அரசின் சட்டங்கள், இவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளன.

அடர்ந்த வனப்பகுதி, மலைப்பகுதிகளில் வசிக்கும் இவர்களுக்கு, கல்வி, சுகாதாரம் கிடைக்க வேண்டும். இவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆரோக்கியத்துடன் வாழும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பழங்குடியினர் தினமும் குறைந்தபட்சம் ஆறு உரிமை மீறல்களை சகித்து கொள்கின்றனர். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே பழங்குடியினருக்கான சேவையை துவக்கினேன்.

ஆதார் கார்டு ஆயிரக்கணக்கான பழங்குடியினர் பலர், ஆதார் கார்டு பெற்றிருக்கவில்லை. நானே 1,200 பேருக்கு ஆதார் கார்டு பதிவு செய்து கொடுத்தேன். இதனால், அவர்கள் அரசு சலுகைகள், திட்டங்களை பெற முடிகிறது. இவர்களுக்காக நான் நிதி சேகரிக்கிறேன். 40,000 ரூபாய் வரை கிடைத்தது. இதை பழங்குடியினர் குடும்பங்களுக்கு கொடுத்து உள்ளேன்.

இவர்களுக்கு ஊட் டச்சத்து குறைபாடு உள்ளது. இதனால் இறப்புகள் அதிகரிக்கின்றன. அரசு அளிக்கும் ரேஷன் பொருட்களில் போதிய ஊட்டச்சத்து கிடைக்காது. இதனால் தொண்டு அமைப்புகளின் உதவியுடன், பழங்குடியினருக்கு குக்கர் வழங்குகிறோம். இதில் அவர்கள் ஊட்டச்சத்தான உணவை வேக வைத்து கொள்ளலாம். அவர்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், கலைப்பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கிறோம்.

பழங்குடியினர் கட்டுப்பாடுடன் வாழ்கின்றனர். அவர்களிடம் இருந்து நாம் கற்க வேண்டியது ஏராளம். மருத்துவ குணங்கள் கொண்ட செடிகள், மூலிகைகள் குறித்து அவர்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது. ஆனால் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். மலை கிராமங்களில் பள்ளிகள் உள்ளன. ஆனால் இங்கு பிள்ளைகளை அனுப்புவதில்லை. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பலர் சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ளனர். ஆனால் அதை அவர்கள் பயன்படுத்துவதில்லை. ஏன் என்றால் அவர்களுக்கு புது விதமான விவசாய நடைமுறை தெரியவில்லை. இவர்களுக்காக அரசு போதிய நிதியுதவி ஒதுக்குகிறது. ஊழல் காரணமாக அந்த தொகை, இவர்களுக்கு கிடைப்பது இல்லை. மேம்பாட்டு பணிகளும் தாமதமாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us