கதைச் சுருக்கம்
கல்லூரியில் படிக்கும் வாலிபராக, கவிதா எனும் சுவாதியின் காதலர் கதிராக., கிருஷ்ணா, வழக்கம் போலவே தன் இயல்பான நடிப்பால் ரசிகனை இருக்கையோடு கட்டிப் போட காட்சிக்கு காட்சி முயற்சித்திருக்கிறார், பாராட்டுக்கள். காதல் காட்சிகளில் கண்களில் ரொமான்ஸையும், ஆக்ஷ்ன் காட்சிகளில் உடம்பில் கூடுதல் பிட்னஸையும் காட்டியிருக்கும் கிருஷ்ணா, அவரது முந்தையமற்ற படங்களைக் காட்டிலும் நிச்சயம் மிரட்டல்.
கவிதா எனும் கதாநாயகியாக சுப்ரமணியபுரம் சுவாதி, இப்படத்தில், தன் சேவை மனப்பான்மையால் பளபளவென ஜொலித்து, பரிதாபகரமான முடிவைத் தேடிக் கொள்வது, நாயகர் கிருஷ்ணாவை மட்டுமல்ல ரசிகனையும் கொல்கிறது! அவருக்கு ஏற்படும் முடிவு அய்யோ பாவம்... என ரசிகனை அலறவிடுவது அவரது பாத்திரத்திற்கும் படத்திற்கும் கூடுதல் வலு சேர்க்கிறது!
நீ வாங்குற சம்பளத்துல மாசா, மாசம் என் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு காசு குடுக்குற உன்னை நான் கொல்ல மாட்டேன் தட் ஈஸ் மை பிஸினஸ் எத்திக்ஸ்... என்றபடி, போலீஸ் பிரகாஷ்ராஜை, சித்ரவதை செய்யும் அடப்பாவி ரக வில்லனாக வரும் ஜோக்கர் நாயகர் குருசோமசுந்தரம், அவரது அப்பாவி, டாக்டர் அப்பாவாக வரும் ராதாரவி, சுகர் பேஷன்ட் கம் புத்திசாலி புலனாய்வு போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ், கிருஷ்ணாவின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர், காமெடி போலீஸ் சிங்கம் புலி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தின் அனுபவ நடிப்பும், நாயகர் கிருஷ்ணாவின் கல்லூரி நண்பர்களாக வரும் மெல்வின், நூர் - ஹரி கிருஷ்ணா உள்ளிட்ட புதுமுக நடிகர்களது அய்யோ பாவ நடிப்பும் கூட படத்திற்கு பலம் சேர்க்க முற்பட்டிருக்கின்றன என்பது ஆறுதல்.
எட்வர்ட் கலைமணியின் கலை, இயக்கம் கண்களுக்கு குளிர்ச்சி என்பதும் கூடுதல் ஆறுதல். படத்தொகுப்பாளர் சாபு ஜோசப்பின் கத்திரி, இந்த யாக்கை படத்தொகுப்பின் போது சில, பல இடங்களில் சற்றே மொக்கையாக இருந்திருப்பது சற்றே சலிப்பைத் தருகிறது.
மெடி-க்ரைம் கதை என்பதால், ஒற்றைக் கண் மட்டும் ஆம்புலன்சில் கிடக்கும் கொடுரக் காட்சி, சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விதம்... ரசிகனை அலறவிடும் மிரட்டல் என்றால், இன்னும் சில, பல ஆக்ஷன் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் இயற்கை எழில் கொஞ்சம் இவரது அழகிய ஒளிப்பதிவு, ஓவியப்பதிவு.. என்பது படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் என்னுள்ளே ஏன் சலனம்..., நான் இந்த காற்றில்.., எந்தன் இறுதி மூச்சு... உள்ளிட்ட மெல்லிசை பாடல்களும், பின்னணி இசையும் இப்படக் கதைக்கேற்ற, இசை கருவிகள் உருட்டல், மிரட்டல்.
குழந்தைவேலப்பன்.டி.யின் இயக்கத்தில், சில, பல இடங்களில் நடைபெறும் தனியார் மருத்துவதுறை குற்றங்களை, மருந்து கம்பெனி கண்டு பிடிக்கும் மருந்தெல்லாம் நோயைக் குணப்படுத்தும்னா, உலகத்துல நோய்களே இல்லாமல் அல்ல.. இருக்கணும்... என்பது உள்ளிட்ட வம்படி வசனங்கள், சாட்டையடி காட்சிகள் வாயிலாக இட்டு நிரப்பி, பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டியிருக்கும் துணிச்சலுக்காக யாக்கை படத்திற்கு ஒரு சல்யூட் அடிக்கலாம். என்றாலும்., படம் முழுக்க பரவி, விரவிக் கிடக்கும் சில, பல லாஜிக் குறைகளுக்காக அந்த சல்யூட்டை வாபஸும் வாங்கிக் கொள்ளலாம்!
ஆக மொத்தத்தில், பணத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் சில, பல தனியார் மருத்துவமனைகளின் தகிடுதத்தங்களை படம் பிடித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருக்கும் யாக்கை - பெரிதாக பெறவில்லை தமிழ் சினிமா ரசிகர்களின் வாக்கை... என்பது வேடிக்கை!
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!