கதைச் சுருக்கம்
தமிழ் சினிமா ரசிகர்கள் சுமார் ஒன்றரை மாத காலமாக சினிமா என்பதையே மறந்திருந்தார்கள். அவர்களை மீண்டும் தியேட்டருக்கு அழைத்து வரும் வலிமை இந்த வாரம் வந்த மெர்க்குரி படத்திற்கு இருக்கிறதா என்பது சந்தேகமே.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், கதைக்குத் தேவை என்பதில் தான் படத்தை மவுனப் படமாக எடுத்திருக்கிறார். ஆனால், அந்த மவுனத்தின் அர்த்தம் ஒரே ஒரு இடத்தில் தான் அழுத்தமாக உறைக்கிறது. மற்றபடி சராசரிக்கும் கீழான ஒரு படமாகவே நகர்கிறது.
இந்துஜா, சனந்த், தீபக் பரமேஷ், சஷான்க் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன் ஆகிய ஐவரும் காது கேளாத, வாய் பேச முடியாதவர்கள். அவர்கள் படித்த பள்ளியின் அலுமினி விழாவுக்காக வந்திருக்கிறார்கள். வந்த இடத்தில், குடித்து, கும்மாளம் அடித்துவிட்டு, காரில் ஜாலியாக வெளியில் கிளம்புகிறார்கள். அப்போது அவர்கள் காரில் தெரியாமல் சிக்கி பிரபுதேவா இறந்து விடுகிறார். அவருடைய பிணத்தை மெர்க்குரி கம்பெனி அருகில் புதைத்துவிட்டு வந்துவிடுகிறார்கள். ஆனால், ஒருவரின் ஐபாட் காணாமல் போக அதைத் தேடி மீண்டும் பிணம் புதைத்த இடத்திற்கு வருகிறார்கள். ஆனால், அந்த இடத்தில் பிரபுதேவாவின் பிணம் இல்லை. காரில் உட்கார வைத்திருந்த இந்துஜாவையும் காணவில்லை. மெர்க்குரி கம்பெனிக்குள் பிரபுதேவாவும், இந்துஜாவும் இருப்பதைப் பார்க்கிறார்கள் நண்பர்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படம் ஆரம்பமாகி பிரபுதேவா விபத்தில் இறக்கும் வரை எந்த பரபரப்பும் இல்லாமல் படம் நகர்கிறது. அவரது மரணித்திற்குப் பின்தான் ஓரளவிற்கு திடுக்கிட வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அதிலும் வழக்கமான பேய்ப் படங்களுக்குரிய பயமுறுத்தல்கள் இல்லாதது குறை.
இந்தப் படத்திற்கு பிரபுதேவா ஏன் எனத் தெரியவில்லை. ஏதோ ஒரு விருப்பத்தில் நடித்திருப்பார் போலிருக்கிறது. சிதிலமான முகத்திற்கிடையில் அவருயை ஏக்கத்தை முடிந்தவரையில் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.
நான்கு நண்பர்கள், ஒரு நண்பி இவர்களில் இந்துஜா மட்டும்தான் தெரிந்த முகமாக இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் பிரபுதேவாவின் கைகளைப் பற்றிக் கொண்டு நடந்த விஷயத்தை விவரிப்பது புதுமை. பேசாமலேயே கண்கலங்க வைக்கிறார். நண்பர்கள் நால்வரில் இந்துஜா ஜோடியாக நடித்திருப்பவருக்குத்தான் கடைசி வரை நடிக்க வாய்ப்பு.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பேச்சுக்கள் இல்லாத குறையை பின்னணி இசை மூலம் காட்சியின் தன்மையை உணர வைத்திருக்கின்றன. படத்தின் மிகப் பெரும் பலம் திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு. இரவு நேரங்களில் கூட மலைப் பிரதேசத்தை தனி அழகுடனும், ஒளி அமைப்புடனும் படமாக்கியிருக்கிறார்.
வேதியியல் கம்பெனிகளால் மனித குலத்திற்கு நடந்த பேரழிவுகளைப் பற்றி ஆரம்பத்திலும், கடைசியிலும் மட்டும் காட்டுகிறார்கள். அந்த பேரழிவுகளைப் பற்றி படத்தில் சில காட்சிகளிலாவது வைத்திருக்கலாம். தவறான எதிரிகளுடன் தான் பலர் போராடுகிறோம் என முடித்திருப்பது சிறப்பு.
மெர்க்குரி - இருளில்...!



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!