கதைச் சுருக்கம்
---------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
அம்பியைக்கூட அஞ்சு நிமிஷத்துக்கு அந்நியனாக மாற்றும் அதிபயங்கர ஊக்க மருந்தை தயாரித்து அதை உலகில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுக்கும் சப்ளை செய்ய நினைக்கும் மாஃபியா லவ் அண்ட் கோ.. அவனை அழிக்கப் புறப்படும் உளவுத்துறை அதிகாரி அகிலனாக விக்ரம். அவருக்கு துணையாக ஆயுஷி (நித்யாமேனன்). லவ் Vs அகிலனே இருமுகன்.
10 எண்றதுக்குள்ள என்ற மிகப் பெரிய டிஸாஸ்டருக்கு பிறகு ஒரு சக்ஸஸ் கொடுத்தே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கி இருக்கிறார் விக்ரம். அரிமா நம்பி என்ற வெற்றிப் படத்தை தந்த டைரக்டர் ஆனந்த் ஷங்கருக்கு இது இரண்டாவது படம். ஸோ... இருவர் தலையிலும் ஆப்பிள். கையில் துப்பாக்கி இறுதியில் ஆப்பிள் தப்பிவிட்டது பாவம்.
முரட்டு தாடி, மிரட்டும் உடல் மொழி என வழக்கம் போலவே 100 சதவீத உழைப்பைக் கொட்டி இருக்கிறார் விக்ரம். ஜிவ்வ்வ்வென்ற ஆரம்ப காட்சிகள் பலவீனமான திரைக்கதையால் ஜவ்வ்வ்வாக இழுபடுகிறது.
நயன் கொள்ளை அழகு தட்ஸ் ஆல். சீரியஸான இடங்களில் எல்லாம் மொக்கை காமெடி அடித்து கடுப்பை டாப் - அப் செய்து விட்டுப் போகிறார் தம்பி ராமய்யா.. வெரி ஸாரிய்யா! அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகளால் முதல் பாதி ஓரளவு சுவாரஸ்யத்துடன் நகர்கிறது. லவ் என்ற வில்லன் கேரக்டரில் நளினமான உடல் மொழியிலும், பெண்மை கலந்த மாடுலேஷனிலும் அப்ளாஸ் அள்ளுகிறார் விக்ரம்.
தமிழில் ஒரு பாண்ட் மூவியாக வந்திருக்க வேண்டிய அத்தனை அம்சமும் கதையில் இருக்கிறது. அநியாயத்துக்கு கோட்டை விட்டிருக்கிறார்கள்.
இருமுகன்: கூகுள்மகன்
குமுதம் ரேட்டிங் ஓகே
-----------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
ஒருமுகன் உக்கிர ஜேம்ஸ்பாண்டாவான்;
மறுமுகன் மயக்கும் அரவாணியென்று
சுறுசுறு வேகம் சூப்பராய் காட்டி
நறுவிசு நடிப்பை நல்கினார் விக்ரம்!
பலப்பல படங்களில் பார்த்துச் சலித்த
பழியதை வாங்கிடும் கதைதான் இதுவும்!
கலகல குடும்பம் சிதறிய பின்னே
கலங்கும் நாயகன் சலம்பும் கதைதான்!
அசுரத் தனமாய்ச் செயல்பட வைக்கும்
அற்புத மருந்தைத் தவீர வாளன்/ளி
விற்றிட நினைக்கும் விபரீத நிகழ்வை
முற்றிலும் தடுத்திட முயல்வார் விக்ரம்!
நித்யா மேனன், நயன தாரா
வித்யாச வேடம் வெளுத்தே விட்டனர்!
அத்யா வசியப் பாதுகாப் பில்லா
சிறைக் காட்சிகள் சிரிப்போ சிரிப்பு!
இத்தனை நாளாய் இந்தியப் போலீஸ்
எத்தனை படத்தில் கோமாளி யானது...
மாத்தி யோசித்த படத்தில் இங்கே
மலேசியப் போலீஸ் ஏமாளி வேடம்!
லொக்கே ஷன்கள் அதகளம் அமர்க்களம்!
வெக்கே ஷனுக்கு வெளிநாடு சென்ற
அனுபவம் தன்னை அள்ளித் தந்திடும்;
ஒளியும் ஒலியும் டாப்பு டக்கர்!
படத்தின் நீளம் ஜவ்வாய் இழுக்குது
பாடல் காட்சிகள் பாடாய்ப் படுத்துது
ராமையா சிரிப்பு ரம்பம் போடுது
ஆமைபோல வேகம் பின்பாதி காட்டுது!
அரவாணி வேடம் பேசும் வசனம்
அரைகுறையாகவே புரிய முடியும்
பாடி லாங்வேஜ் விக்ரம் நடிப்பில்
லேடி யங்ஏஜ் லாகவ நளினம்!
ஆவல் தூண்டும் ஆடல் செட்டிங்க்ஸ்
கோவா கார்னிவல் போன்றே இளமை
பாதாம் பாலாய் இனிக்கும் நித்யா
பாடல் சீன்தான் பரவசம் போங்கோ!
அரிவாள் வீச்சுக்குத் தலையைச் சாய்க்கும்
அரிமா நிகர்த்தோர் அநேகர் உண்டு!
தோட்டா வுக்கே டாட்டா காட்டித்
தாத்தா ஒருத்தர் தலையைச் சாய்ப்பார்!
படத்தில் காட்டும் அதிசய மருந்தை
பாட்டில் முழுக்கக் குடித்தால் மட்டுமே
திடத்துடன் படத்தை ரசிக்க முடியும் -
முடியும் வரையில் இந்தப் படத்தை!
திரையரங்கில் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ரசிகர் ஜீவாவின் கருத்து: இடைவேளைக்கு முன்னர் வேகம், பின்பாதி இழுவை. அறிவியல் கருத்துக்கள் நிறைய உண்டு. ம்ம்ம்.. பார்க்கலாம்!

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!