கதைச் சுருக்கம்
------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
ரயில் அல்லது எக்ஸ்பிரஸ் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாகத் தொடர்வண்டி என்பதை அனுமானித்து அதைத் தொடரி என்று சுருக்கியிருக்கிறார்கள். புதுமையான பேரும் வைத்தாயிற்று! வரிவிலக்கும் வழி செய்தாகிவிட்டது. சரிதான். கொஞ்சம் சொந்தமாகக் கதை செய்வதிலும் இந்த ஆர்வத்தை காட்டியிருந்தால் நன்றாக இருக்கும். சரி உருவல் மேட்டருக்கு வருவோம்.
1976ஆம் வருடம் சில்வர் ஸ்ட்ரிக் என்று ஒரு படம் வந்தது. அந்தப் படத்தில் லாஸ் ஏஞ்சலிஸிலிருந்து சிகாகோ நோக்கிச் செல்லும் ரயிலிலேயே மன்னிகவும் - தொடரியிலேயே கதை முழுதும் நடக்கும்.
ஒரு கட்டத்தில் எஞ்சின் டிரைவர் இறந்துவிட, அதிபயங்கர வேகத்தில் அந்தப் பயணிகள் ரயில் சீறிப் பாய்ந்து செல்லும். எமர்ஜென்ஸி பிரேக்ககளும் செயலிழந்த நிலையில் கதாநாயகன், எஞ்சினையும் மற்ற பெட்டிகளையும் இணைக்கும் கப்ளிங்கை நீக்குவார். ஆளில்லாத எஞ்சின் மட்டும் ராட்சச வேகத்தில் தனியே போய், ஒரு ஸ்டேஷனைத் தரைமட்டமாக்கும்; பயணிகள் காப்பாற்றப்படுவார்கள்.
தொடரியின் மையக் கரு இதுதான்!
படத்தின் சுவாரசியத்தை மட்டுப்படுத்தத் தேவையானவற்றைச் செய்து, கேசரியைக் கடுகு, மிளகாய் போட்டுத் தாளித்திருக்கிறார்கள்.
தனுஷ் நன்றாக நடித்திருக்கிறார் என்பது, விலைவாசி நாளுக்குநாள் உயருகிறது என்பதைப் போன்று சாதாரண விவரணையாகிவிடும்.
மீடியாக்களைப் புரட்டி எடுத்துவிடுகிறார் இயக்குநர்.
குடித்துவிட்டு பணிக்கு வருவது, குடும்பப் பிரச்னைகளைப் பணி நேரத்தில் பேசுவதால் வரும் மன அழுத்தம் ஆகியன போகிறபோக்கில் - ஆனால் அழுத்தமாகச் சொல்லப்படுகின்றன.
மத்திய அமைச்சராக வரும் ராதாரவி, ரயில்வே நிலைய அதிகாரியான சின்னி ஜெயந்த் இருவரும் மிக நிதானமாகப் பிரச்னைகளைக் கையாளு பாணிக்கு ஒரு சபாஷ்!
கீர்த்தி சுரேஷ் அப்பாவித்தனம், காதல், அச்சம் எனக் கலவையான உணர்வுகளை மிகையின்றி அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.
கிட்டத்தட்ட ஆயிரம் பயணிகளின் உயிர் ஊசல், ரயிலோ கட்டுபபாடில்லாமல் பறக்கிறது. எஞ்சினில் சிக்கித் தவிக்கும் காதலி... இந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக ஓடும் ரயில் பெட்டியின் கூரையில் நின்று தனுஷ் நடனம் ஆடுவார் பாருங்கள், ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.
மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் சீறும் ரயிலில் பற்றிக் கொள்ளும் தீயை அதே வேகத்தில் பக்கத்துச் சாலையில் வரும் தீயணைப்பு வணி, அணைப்பது படத்தின் அதிகபட்ச நகைச்சுவை.
தொடரி; ஏறுகிறது பிடரியில்!
திரையரங்கில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த நண்பர்கள் பாலு, கோகுள், தினேஷ், வினோத் மற்றும் ராம் ஆகியோரின் கருத்து: இடைவேளைக்கு முன்னால் மிக மெதுவாகப் போகிறது. பின்பாதி தேவலை.. படம்....ம்ம்ம்... பார்க்கலாம்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!