கதைச் சுருக்கம்
-----------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
சீனுராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் மீண்டும் ஒரு கிராமத்து மண் சார்ந்த படம் தர்மதுரை. மருத்துவர்கள் கிராமங்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற விதையை இதன் மூலம் விதைக்க முயற்சித்த இயக்குநரைப் பாராட்டலாம்.
தர்மதுரை பாத்திரத்தைத் தாங்கி நடிப்பில் வியப்படைய வைக்கிறார் விஜய் சேதுபதி. போதையில் செய்யும் அலப்பரை. சாவு வீட்டில் குத்து டான்ஸ் தமன்னா, சிருஷ்டியுடனான நட்பில் காட்டும் உணர்ச்சி என்று பின்னியெடுக்கிறது விஜய்சேதுபதியின் நடிப்பு.
சிருஷ்டிடாங்கே கொஞ்ச நேரம் என்றாலும் மனதில் நிற்கிறார். தமன்னா கதைக்குப் பெரும்பலம். நோ கவர்ச்சி ப்ளஸ். ஐஸ்வர்யா ராஜேஷூம் மனதில் ஒட்டிக் கொள்கிறார்.
ராதிகா கிராமத்து தாய்க்கான வார்ப்பு கஞ்சா கருப்பு, அருள்தாஸ் வந்து போகிறார்கள். பேராசிரியராக ராஜேஷிடம் அந்த தேரணை மிஸ்ஸிங்.
தேனி, ஆண்டிபட்டி கிராமத்து வசனத்தை, குளுமையை ஒளிப்பதிவில் உணரவைக்கிறார். ஒளிப்பதிவாளர் மக்கா கலங்குதப்பா ஆண்டிப்பட்டி காத்தே என்று பாடல் இசையும் பின்னணியும் ரகளை.
விஜய்சேதுபதி பணத்துடன் ஊரை விட்டுப் போனபிறகு அந்த குடும்பம் படும் அவஸ்தையை கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம் என்றாலும் எல்லாவற்றையும் விஜய்சேதுபதி என்ற ஒற்றை சுமைதாங்கி மேல் ஏற்றிவைத்து, அவரும் நம்மை ஏமாற்றாமல் தாங்கிச் செல்வது சபாஷ்.
தர்மதுரை: செயல்துரை
குமுதம் ரேட்டிங்: ஓகே
-----------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
வரதட்சணைப் பிரச்னையில் ஏற்படும் பெண்ணின் தற்கொலை, ஆணின் குடிப்பழக்கம், மறு வாழ்வு என்று எதார்த்த கதை. படம் ஆரம்பித்து அரைமணி நேரம் வரை ஒரு கிராமத்தையும் அதில் உள்ள விஜய்சேதுபதி குடும்பத்தையும் அழுத்தமாக மனத்தில் பதியவைப்பது அபாரம்.
என்னதான் மீசையை எடுத்துவிட்டாலும், விஜய் சேதுபதியைக் கல்லூரி மாணவனாகக் காண்பித்திருப்பது முதலில் கெதக் என்றாகிவிடுகிறது. ஆனால் இவரைவிட இளம் கதாநாயகர்களைப் பார்த்துப் பழகிப் போயிருப்பதால் மனம் சமாதானமாகிவிடுகிறது. ஒளிப்பதிவும், படப்பிடிப்புக்குத் தேர்வு செய்திருக்கும் இடங்களும் அபாரம். கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்போல் இருக்கிறது.
இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள்! அதிலும் ஸ்ருஷ்டி டாங்கேவையும் அவரது ஸ்ருங்காரக் கன்னக் குழியையும் சரியாகவே பயன்படுத்தவில்லை. கல்லூரி திரைப்படத்துக்குப் பின்னர் தமன்னா பெயர் ஸ்கோர் பண்ணும் படம் இது. சின்னப் பகுதியில் வந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் அழுத்தமான பாத்திரம், நடிப்பு.
கயல் பெரேராவின் யதார்த்தமான நடிப்பு அருமை. ஆரம்பக் காட்சியே டாஸ்மாக்தான். அதன் பின்னர் பல இடங்களிலும் மது தொடர்கிறது. மன வேதனைக்கு மது ஒன்றே மாற்றுவழி என்ற தவறான கற்பிதம் வலியுறுத்தப்படுகிறது. கண்டனங்கள்!
விஜய் சேதுபதி மென்மையான உணர்ச்சிகளைப் பல காட்சிகளிலும் நுணுக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் காட்சிகள் பிரமாதம்.
கிராமத்துக் காவல்காரராக வரும் பாஸ்கரும், அவரது மகள் ஐஸ்வர்யா ராஜேஷூம் பாத்திரமாகவே ஒன்றிப் போய்விட்டனர். ஹாட்ஸ் ஆஃப்! ராதிகா இயல்பான கிராமத்துத் தாயாக அசத்துகிறார்.
அண்ணா என்ற வாய்க்கு வாய் கூப்பிட்டவரையே திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கும்போது கதாநாயகிக்கு மட்டும் அல்ல... நமக்கும் நெருடலாகத் தான் இருக்கிறது.
பேராசிரியர் ராஜேஷ் நடிப்பில் மின்னுகிறார். வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளை, தனக்கு ஏற்படும் அவமதிப்புகளை அனுசரித்துப்போவது புன்னகை பூக்க வைக்கிற கஞ்சா கருப்பு பாத்திரம் சிரிப்புக்குப் பதில் எரிச்சலையே கிளப்புகிறது.
தமன்னாவின் கருக்கலைப்பு, ஸ்ருஷ்டியின் செகண்ட் இயர் சிண்ட்ரோம், முனியாண்டி பெயர்க் காரணம் என்று சின்னச் சின்ன நகாசு வேலைகள் நறுக். லட்சக்கணக்கான ரூபாய் பணத்தோடு அலையும் கதாநாயகன் அந்தப் பணத்தைப் பார்க்காமலே பல நாட்கள் இருப்பது அபத்தம். நல்லவேளை அந்த பணம் தமன்னாவின் கண்ணில் பட்டதால் படம் முடிவுக்கு வருகிறது.
விறுவிறுவென ஓடும் இன்றைய திரைப்படங்கள் நடுவே, மிக மெதுவாக, அவசரமே இல்லாமல் தர்மதுரை நகர்கிறது. ஒவ்வொரு பாத்திரத்தையும், மன உணர்வுகளையும் வெளிப்படுத்த சீனு ராமசாமி மெனக்கெடுவது தெரிகிறது. தியேட்டரை விட்டு வெளியே வரும்போது மனம் கணக்கிறது.
தர்மதுரை மென்சோகக் கவிதை!
திரையரங்கில் ரசிகர் வந்தவாசி பாஸ்கர் கருத்து: நான் விஜய் சேதுபதி ரசிகன். அவரையும் லொகேஷன்களையும் தவிர வேற எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்ல
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!