கதைச் சுருக்கம்
--------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
வடிவேலுவின் நானும் ரௌடிதான் போல் வெறும் கெத்திலேயே வண்டியை ஓட்டும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் வருகிறார் நயன்தாரா. தன்னைக் காதலிக்க நயன்தாரா போடும் ஒரே கண்டிஷன் என் பெற்றோரின் மரணத்துக்கு காரணமான பார்த்திபனை போட்டுத் தள்ள வேண்டும் என்பதுதான்!
ஒரு பழிவாங்கும் கதையை படம் முழுக்க காமெடி கலந்து அட்டகாசமாய்த் தந்திருக்கிறார் நயன்தாராவின் நண்பர் விக்னேஷ் சிவன்.
விஜய்சேதுபதி சூப்பர் ஜி. மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். ஸ்கோர் பண்ண தனக்கு வாய்ப்பு கம்மிதான் என்று தெரிந்தாலும் காட்சிக்குக் காட்சி கலகலக்க வைக்கிறார்.
அம்மா ராதிகாவுக்குத் தெரியாமல் செய்யும் குறும்பு எல்லாம் ஹஹா... தாடி மீசை மட்டும் மிஸ்ஸிங்.
சென்ற படத்தில் கல்லூரி மாணவி போல் இருந்த நயன்தாரா, இங்கே ப்ளஸ்டூ பெண் போல மாறியிருக்கிறார். சவாலான காதுகேட்காத பாத்திரத்தில் ஜோதிகா போல வாழ்ந்திருக்கிறார். திக்கித் திணறி தன் பிரச்னையைச் சொல்லும்போது சிலிர்க்க வைக்கிறார். கோபம், கனிவு, இரக்கம், காதல் என்று முழுக்க முழுக்க இது நயன்தாரா படம் என்று முத்திரை பதிக்கிறார். சொந்தக் குரலும் ஒர கோப்பைத் தேன்!
கறுப்பு ஹல்க் பார்த்திபன், கிள்ளிவளவனாக உள்ளத்தைக் கிள்ளுகிறார். உடல் மொழியும் வாய்மொழியும் அப்ளாஸ்.
தோழனாக வரும் பாலாஜி புன்னகைக்க வைக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரனின் நடை, உடை, பாவனை ஆஸம்!
சரி, யார் அந்த ராகுல் தாத்தா? அவர் கூகுள் மேப் தேடும் காட்சியில் வெடிச் சிரிப்பு கிளம்புகிறது.
கைதட்டல் வாங்கும் போடணும் வசனத்தை சென்ஸாரில் ம்யூட்டில் போட்டிருக்க வேண்டாமா? ஏகப்பட்ட இடத்தில் டபுள் மீனிங் கெட்ட வார்த்தை வருவது நெளிய வைக்கிறது.
பார்த்த பாண்டிச்சேரிதான் என்றாலும் ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமரா புதுசு போல கவிதை பாடியிருக்கிறது.
மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் என்று பழைய வில்லன்களையும் காமெடியில் இறக்கியிருக்கிறார்கள்.
ஆர்.ஆரில் அனிருத் துள்ளி விளையாடியிருக்கிறார்.
நானும் ரௌடிதான் - ஆடியன்ஸ் ஹேப்பி
குமுதம் ரேட்டிங் - நன்று
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.