கதைச் சுருக்கம்
----------------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
நகரத்துக் குழந்தைகளின் புது உலகத்தை பசங்க - 2 படத்தின் மூலம் காட்டியிருக்கிறார்கள் இயக்குநர் பாண்டியராஜூம் நடிகர் சூர்யாவும்.
ADHD என்கிற குறைபாட்டால் அதீத பரபரப்புக்கு ஆளாகிற குழந்தைகள் எப்படியெல்லாம் குறும்பு செய்வார்கள். பெற்றோரும், ஆசிரியர்களும் எவ்வளவு பாதிப்படைவார்கள் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியதோடு, அதற்கொரு தீர்வும் சொல்லும் படம்.
கார்த்திக்குமார் - பிந்துமாதவி தம்பதியர்க்கு நெயினா என்றாரு சுட்டிப்பெண். முனிஸ்காந்த் - வித்யா தம்பதியர்க்கு கவின் என்றொரு சுட்டிப் பையன். இவர்களின் சுட்டித்தனத்தைத் தாங்கமுடியாமல் பல பள்ளிகள், பல அபார்ட்மெண்ட்ஸ் என்று மாறிமாறி பெற்றோர்படும் அவஸ்தை நகரத்துப் பெற்றோரின் பிரதிபலிப்பு.
மாஸ்டர் நிஷேஷ் (கவின்), பேபி வைஷ்ணவி (நெயினா) குழந்தைகள் உலகுக்கான ஹைக்கூ. இவர்கள் செய்யும் குறும்புகளால் திரையரங்கமே அதகளப்படுகிறது. டீச்சரை அடிப்பது, போரடித்தால் பள்ளி மணியை அடிப்பது, ஹாஸ்டலில் பேய்க்கதை சொல்லி மற்ற குழந்தைகளை பயமுறுத்துவது... என்று குழந்தைகளின் நிஜஉலகம் நம் கண்முன்.
டாக்டராக வரும் சூர்யா, மனைவி அமலாபாலுடன் குழந்தைகளோடு கை கோர்த்து அவர்களின் உலகிற்கே நம்மை அழைத்துச் செல்கிறார். பிந்துமாதவி, வித்யா, கார்த்திக்குமார், முனிஸ்காந்த் ஆகியோர் ADHD குழந்தைகளின் பெற்றோர்களின் அச்சுஅசல் வார்ப்பு. இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய ப்ளஸ்.
குழந்தைகளின் உலகத்தைப் புரியாமல் அல்லாடும் பெற்றோருக்குத்தான் முதலில் ட்ரீட்மெண்ட் அவசியம் என்பதை அழுத்தமாகச் சொல்வது நெத்தியடி. இருந்தாலும் தாரே ஜமீன் பர் காட்சிகள் சில நினைவுக்கு வருவதை தவிர்த்திருக்கலாம்.
பசங்க 2 - பெற்றோருக்கான பாடம்
குமுதம் ரேட்டிங் - ஓகே


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!