கதைச் சுருக்கம்
------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
வௌ்ளைக்காரப் பேய்களுக்கும், தமிழ்நாட்டுப் பேய்களுக்கும் நூறாண்டுகளாய் தினம் தினம் ராத்திரி நடக்கும் கொலைவெறித் தாக்குதலை இரண்டு மனிதர்கள் முடித்து வைக்கும் ஜாலியான பேய்க் கதை! இயக்கம் தரணிதான்!
நாய்கள் ஜாக்கிரதையைத் தொடர்ந்து சிபி சத்யராஜ் நடிப்பில் நல்ல முன்னேற்றம் புகைகளின் நடுவே தோன்றும் உதார் காட்சியில் ரசிக்க வைக்கிறார். பயம், வீரம், காதல், சமாளிப்பு என்று எல்லாம் வருகிறது. கூடவே கருணாகரன், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் இருப்பதால் காமெடிக்கு கியாரண்டி! பேயெல்லாம் அப்பாவின் செட்டப் என்று பிந்துமாதவி சொல்ல, அதை நம்பி சரக்குப் போட்டு சிபி பேய்களை வெறுப்பேற்றுவது செமை.
உருகத் தயாராக இருக்கும் கோன் ஐஸ்கிரீம் மாதிரி இருக்கிறார் பிந்து மாதவி. ஆரம்பத்தில் அவரும் ஒரு பேய் என்று பயமுறுத்துவது க்யூட்.
நக்கல் இல்லாத சீரியஸ் சத்யராஜ்.
டைட்டில் சாங் ஓகே. ஆர்.ஆரில் பயம் காட்டியிருக்கிறார் சித்தார்த் விபின்.
அந்த பேய் பங்களாவில் ஒரு வாரம் தங்கும் ஐடியாவெல்லாம் சரிதான். ஆனால் அந்தக் காட்சிகள் ரிப்பீட் அடிப்பது ரிவிட்.
ஜாக்சன் துரை - ஜாலியான பேய்கள்!
குமுதம் ரேட்டிங் - ஓகே
-------------------------------------------------------------------
கல்கி விமர்சனம்
ஜாக்சன்துரை என்ற பெயரைப் பார்த்ததும் ஒரே நபரின் பெயர் என்று நினைத்துவிடாதீர்கள். ஜாக்சன் ஒருபேய்; துரை? அவரும்/அதுவும் ஒரு பேய்தான். பெயரில் எப்படி இரு நபர்கள் இருக்கிறார்களோ கதையும் அப்படித்தான்.
இடைவேளைக்கு முன்பு வரை, பேய் வீட்டில்? நாட்கள் இருந்தால் பிந்து மாதவி கிடைப்பார் என்ற லட்சியத்தில் சிபிராஜூம், கருணாவும் பாழடைந்த மாளிகையில் தங்குவது ஒரு ட்ராக். அதன் பிறகு சடாரென்று கதை பீரியட் படமாக மாறி, ஆங்கிலேய ஆட்சி அடகுமுறைக்கு எதிராகக் கொந்தளிக்கிறது. கொஞ்சம் அசந்த நேரத்தில் பீரியட் காலத்து பேய்கள், சிபிராஜ் மற்றும் கருணாவுடன் சேர்ந்து ஜல்லியடிக்கின்றன.
பின்னணி இசையைப் பாராட்டியே தீரவேண்டும். அதேபோலப் பேய் பங்களாவின் காட்சியமைப்புகளும் அட்டகாசம். அரங்கினுள் நுழையும் முன்னரே டிக்கட் கிழிப்பவர், சார் பாடல் சீன்லயே கேன்டீன் திறந்திருக்கும் எனக் கிசுகிசுத்தே உள்ளே அனுமதிக்கிறார். அதாவது ஒவ்வொரு பாட்டு சீனும் ஒரு இடைவேளை!
கொள்கை வேறு; நடிப்பு வேறு; என்பதில் சத்யராஜ் தெளிவாக இருப்பது தெரிகிறது. பின்ன? சாமியாவது பூதமாவது? என்று முழங்குபவர், சருமக் கோளாறு மேக்அப்புடன் பேயாக நடிக்கிறாரே!
பேய் படங்களில் பயம் இருக்க வேண்டும்! அல்லது சிரிப்பாவது இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாவிட்டால் சுவாரசியமாக வேறு ஏதாவது இருந்தாலாவதுபரவாயில்லை. ஒன்றுமேயில்லமல் கடுப்பேற்றுகிறது படம்.
இதைப் பாருங்கள். நூறு வருடங்களுக்கு முன் செத்துப்போன புரட்சிப் பேய் மற்றும் அதன் கூட்டாளிகள், தாங்கள் செத்துப் போனது தெரியாமல், வில்லனைப் பழிவாங்கும் முயற்சியில் தினசரி ஈடுபட்டு, தினசரி மறுபடியும் செத்துக் கொண்டிருக்கின்றன. இதில் சாகடிக்கும் வில்லனும், செத்துப் பேயாய் மாறி இருப்பதுதான் விசேஷம்!
100 x 365 = 36,500 தடவை நடக்கும் இந்த நிகழ்ச்சியை நல்ல வேளையாக அத்தனை தடவைகளும் காட்டாமல் ஏழெட்டுத் தடவையோடு நிறுத்திக் கொள்கிறார்கள், தப்பித்தோம்!
நூறு வருடமாக மக்கள் வரியாகச் செலுத்தும் நெல்/அரிசி கெட்டுப் போகாமல் அப்படியே இருக்குமா என்பதை வேளாண் விஞ்ஞானிகள் தான் விளக்க வேண்டும்.
பேயை ஈட்டியால் குத்தி, தேசக் கொடியைப் பறக்கவிட்டால் புரட்சிப் பேய்கள் சமாதானமாகும் என்ற நீதி சொல்லப்பட்டிருக்கிறது.
ஜாக்சன் துரை - அரைகுறை!
திரையங்கில் கோவை ஜங்கமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பாலகுருநாதனின் கருத்து: பேசாம போயிடுங்க என்று எச்சரித்துவிட்டு வேகமாக நடந்தார்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!