கதைச் சுருக்கம்
குமுதம் திரைவிமர்சனம்
சண்டி வீரன்
மக்களின் தற்போதைய முக்கிய பிரச்னையான தண்ணீர் (ஹலோ, குடி தண்ணீருங்க!) பஞ்சத்தை கதையாக எடுத்துக் கொண்டதற்காகவே பாலாவையும், சற்குணத்தையும் பாராட்டலாம். வன்முறை, ஆபாசம், இரட்டை அர்த்த வசனம் எதுவும் இல்லாமல் ஒரு நீட் ஸ்டோரி. பக்கத்து ஊருக்கு தண்ணீர் தருவதில் ஏற்படும் தகராறை ஒண்டி வீரனாக நின்று கதாநாயகன் தீர்த்து வைப்பதுதான் சண்டிவீரன். நடுவில் கொஞ்சம் மானே, தேனே, கயலே போட்டுக் கொள்ளவும்!
பாத்திரத்துடன் பொருந்திப் போகிறார் அதர்வா. கோபம் ஏற்படும் காட்சியில் நன்று.
சின்ன உடம்பும் பெரிய கண்களுமாய் ஆனந்தி கொள்ளை கொள்கிறார். அந்தத் தவிப்பு, கவிதை.
தஞ்சைத் தமிழும், சூழலும் பசுமை. (அந்தப் பகுதி மக்கள் சட்டவிரோதமாய் சிங்கப்பூர் சென்று பிரம்படி பட்டதையும் காட்டியிருக்கிறார்கள்) அந்த பம்ப் செட் லொகேஷன் ஸ்வீட்.
நிலவில் தண்ணீர் இருக்கான்னு ராக்கெட் விடறோம். ஆனா நிலத்தில் தண்ணீரை வியாபாரம் பண்றோம். பாடல் வரியும்; கர்நாடகாகாரன் தண்ணீர் தரலேன்னா கோபப்படுகிறோமே... நாமே பக்கத்து ஊருக்குத் தண்ணி தர யோசிக்கிறோமே வசனமும் நெஞ்சில் அறைகிறது.
கொடூர மனம் கொண்டவராக லால் நச்சென்று இருந்தாலும் கடைசியில் கதவைச் சாத்தி அவரைக் காமெடியனாக்கியது அச்சுபிச்சு! பல காட்சிகள் ஒரே மாதிரி இழுப்பதும் எரிச்சல்.
ச.வீ. - மக்கள் பிரச்னை
குமுதம் ரேட்டிங் - ஓகே















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.