கதைச் சுருக்கம்
-------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
இலங்கையில் நடந்த உண்மைக் கதை இது.
வழக்கமாக ஏமாற்றுபவராக நடிக்கும் ஜீவன், இங்கே ஏமாறுபவராக நடித்திருக்கிறார். ரியல் எஸ்டேட், அடுக்குமாடி கட்டிட ஊழல்களை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறார்கள்.
அடாவடி செய்து, ஏழைகளை மிரட்டி, பயமுறுத்தி இடத்தை எழுதி வாங்கும் கும்பல் என்பது தெரியாமல் ஜீவன் அவர்களுடன் கை கோர்க்க, அப்புறம் என்ன ஆச்சு என்பதுதான் அதிபர் இயக்கம் சூர்யபிரகாஷ்.
வழக்கம்போல் அதிரடி ஜீவன். சண்டைக் காட்சிகளில் சபாஷ். தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் பொங்கிப் பெடலெடுக்கிறார்.
எந்த ஆரவாரமுமில்லாமல் வெகு இயல்பாக கதாநாயகி வித்யா.
நட்புக்கு நந்தா. நல்லவராக ரஞ்சித். அவர்தான் வில்லன் என்பது பச்சைப் பிள்ளைக்குக் கூடத் தெரிந்து விடுகிறது.
கொஞ்ச நேரம் வந்தாலும் சமுத்திரக்கனி பளிச். வழக்கமான யோக்கியர் வேடம்தான் என்றாலும் அதில் காமெடியைக் கலந்திருப்பது வித்தியாசம். ஆட்டோவைக் கூப்பிடுடா. அப்பதான் நான் சாலேன்னு ஆடியன்ஸ் நினைப்பாங்க!
அதிபர் - வீடு வாங்குபவர்கள், விற்பவர்களுக்கு எச்சரி்க்கை!
குமுதம் ரேட்டிங் - ஓகே
------------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
இளம் பெண்ணைத் தப்பான வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்யும் இளைஞனைக் கதாநாயகன் சவட்டி எடுக்கும் காட்சியுடன் படம் ஆரம்பம் ஆகிறது. அட! இதேமாதிரி கமல்ஹாசன் படத்தில் பார்த்திருக்கிறோமே என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், சம்பவம் நடப்பது கனடாவில், கதாநாயகனின் அம்மா அந்நிய நாட்டில் இது போலத் தப்பை எல்லாம் தட்டிக் கேட்க கூடாது என்று பொறுப்பாக உபதேசிக்கிறார். கதாநாயகன் ஜீவனும் அம்மா சொல்படி நல்ல பிள்ளையாக இந்தியா திரும்பி அங்கே கட்டுமானத் தொழில் செய்கிறார்.
அந்நிய முதலீடு கொண்டு தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழில் ஆரம்பிக்கும் அவருக்கு இங்கே பல சிக்கல்கள் உருவாகி அவரை நோகடிக்கின்றன. அவர்களை எதிர்த்துப் போராடுவதே முழுக் கதை.
சரி! மற்ற விஷயங்களை லேசாகப் பார்ப்போம். பெரிய இடைவெளிக்கு பிறகு ஜீவன் மறுபிரவேசம் செய்திருக்கிறார். களையான. கம்பீரமான தோற்றம். அலட்டல் இல்லாத நடிப்பு.
ஆனால் எவ்வளவு பெரிய துரோகங்கள் நேர்ந்தாலும் அதை அதிர்ச்சியில்லாமல் எதிர்கொள்ளும் அவர், ஏதோ செய்து எதிரிகளின் சதியை முறியடிக்கப் போகிறார் என்று நம்பிக்கையுடன் உட்கார்ந்திருந்தால் படம் முடியும் வரை உருப்படியாக எதையும் செய்யாமலேயே இருந்துவிடுகிறார்.
உதாரணத்துக்கு அவரை ஏன் சி.பி.ஐ. கைது செய்தது என்பதுகூடத் தெரிந்து கொள்ள முடியாத அப்பிராணியாக இருக்கிறார் ஜீவன். அவரை விடுவிப்பதுகூட அவரது குடும்பத்தினர்தான்.
சமுத்திரக்கனி அலட்டலாக வசனம் பேசிக் கவர்கிறார். அவருக்கு ஒரு ஷொட்டு! ஆனால் உடல் மொழியிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நன்றாகயிருந்திருக்கும்.
தம்பி ராமையா திறமையான நடிகர்தான். ஆனாலும் சம்பந்தமில்லாமல் அதிகமான காட்சிகளை அவரே ஆக்கிரமித்துக் கொள்கிறார். கோவை சரளாவின் நகைச்சுவை சிரிப்புக்கு பதில் கடுப்பைத்தான் ஏற்படுத்துகிறது. கனல் கண்ணன் அமைத்திருக்கும் சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது.
நிலம் மற்றும் வீடு வாங்குபவர்கள் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காகப் படக்குழுவினரைப் பாராட்டியே தீரவேண்டும்.
அதிபர் - டக்கர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!