கதைச் சுருக்கம்
கல்கி சினிமா விமர்சனம்
வலியவன்
வலிமையான திரைக்கதையோடு எடுக்கப்பட்டதே வலியவன். வசனம் வலிது. காட்சிகள் அரிது. நடிப்பு இனிது. பாடல்களின் படப்பிடிப்பு புதிது. இயக்குநர் விரும்பியிருப்பது பெரிதினும் பெரிது. சரவணன் மீண்டும் நிரூபித்திருக்கிறார். படம் பார்க்க வருகிற ரசிகர்களை புத்திசாலிகளாக மதித்து திரைக்கதையை உருவாக்கியிருப்பதற்காக இயக்குநர் சரவணனுக்கு ஒரு பெரிய சபாஷ் போடலாம்.
முன்பின் அறிமுகமில்லாத அழகான பெண் (ஆண்ட்ரியா) திடீரென்று வந்து காதலைச் சொல்வதும், அவளைக் கண்டுபிடிச்ச ஜெய்- சப்வேக்களில், பெரும் அங்காடிகளில், சந்தடிமிக்க சாலைகளில், அறைக்கு, அலுவலகத்துக்கு என்று அலைவது, கான்ஃப்ரன்ஸ் கால்களில் நண்பர்களோடு அலம்பல் செய்வது என் யூத் ஸ்பெஷல் ட்ரீட்.
கதாநாயகன் ஜெய் சென்னையில் அவ்ளோ பெரிய வீடு இருக்கிறப்ப - ஏன் நண்பர்களோட அறையில் தங்கியிருக்கிறார். வங்கி அதிகாரி (ஜெய்யின் அப்பா) முன்வரிசை பல் ஒன்று ஏன் விழுந்தது?
காதலைச் சொன்ன ஆன்ட்ரியா ஏன் சர்வதேச புகழ் குத்துச்சண்டை வீரர் அஸ்வினை அடிக்கச் சொல்கிறார்? சிம்பிளான கேள்விகளுக்கான பதிலாக திரைக்கதையைப் பின்னியிருக்கிறார் இயக்குநர். பின்னிட்டாரு.
ஆபீஸ் பார்ட்டியில் தண்ணி அடித்துவிட்டு, குற்ற உணர்வு மிகுந்து அம்மாவுக்கு போன் போட்டு ஜெய் கேவிக் கேவி அழுவதும், உயர் அதிகாரிகளுக்கும் கல்லூரி பேராசிரியருக்கும் நள்ளிரவில் போன் போட்டு பாவமன்னிப்பு கேட்பதும், லிப்ட் கொடுக்கும் ஆன்ட்ரியாவுக்குப் பிறந்தநாள் பரிசு (சூப்பர் கிப்டுங்கன்னா) கொடுப்பதும் என்று ஜெய் கலக்கியிருக்கிறார். கடைசி காட்சியில் சட்டையைக் கழற்றி விட்டு காக்ஸரை அடிக்கற காட்சியில் செம மிரட்டல்.
நாயகர் தர வரிசையில் ஜெய் மிகச் சுலபமாக இன்னொரு மேற்படியில் கால் வைத்திருக்கிறார் வெல்கம்.
பிச்சைக்காரனுக்கு ஜீன்ஸும், முத்தமும் - பிலால் ஹோட்டல் நான்-வெஜ் அயிட்டங்கள் - கையேந்தி பவன் வாடிக்கையாளர்களுக்கு என ஏராளமான கலகலப்பு. உதட்டின் நுனி வரை வந்து விட்ட கெட்ட வார்த்தையை அண்ணா சிலையைப் பார்த்து அடக்கிக் கொண்டு அண்ணா இருக்கிறாருன்னு பார்க்கறேன் என் ஜெய் சொல்வது,
சப்வேயில் காதலை மறுதலிக்கும ஆன்ட்ரியாவிடம் பெரியாரை கோட் செய்வது (காதல்ங்கறது வாழ்க்கை, கல்யாணங்கறது சடங்கு. சடங்குக்காக வாழ்க்கையை இழந்துடாதே), அதற்கு ஆன்ட்ரியாவின் ரியாக்ஷன் காதல் தோல்வியில் புலம்பும்போது, இன்னொரு தோல்வியாளர் வந்து சேர்ந்துகொண்டு தத்துவங்களாகப் பொழிந்து விட்டு டீக்கான காசை தானே கொடுப்பது என நெஞ்சை அள்ளும் காட்சிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அப்பா - பிள்ளைக்கான உறவுக்குள் ஒளிந்திருக்கும் உளவியலை ஒரு நேர்த்தியான காதலோடு சொன்னதற்காக வலியவன் வெல்வான்.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.