கதைச் சுருக்கம்
-----------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறான் ரஜினி முருகன்.
தாத்தா, பாசம், குடும்பம், காதல், பஞ்சாயத்து என்று பக்கா செண்டிமெண்ட் படத்தை கலகலவென சூப்பர்ஸ்டார் டச்சுடன் மதுரை மணம் கமழ தந்திருப்பதற்கு பொன்ராமுக்கு ஒரு பொக்கே!
கதை?
வேலை வெட்டியில்லாத பேரன் செட்டிலாக, தன்னுடைய சொத்தைப் பிரித்துக் கொடுக்க தாத்தா முயலும் போது ஏற்படும் பிரச்னை ஒருபக்கம், சண்டைக்கார மாமனுடைய மகளை சிவகார்த்திகேயன் காதலிக்க, அதற்கு மாமன் வீட்டார் கொடுக்கும் எதிர்ப்பு ஒரு பக்கம், இரண்டும் ஒரு புள்ளியில் இணையும்போது சொத்து என்ன ஆனது? மாமன் மகள் கிடைத்தாளா இல்லையா என்பதுதான் படம்.
பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சிவகார்த்திகேயன். டான்ஸ், காதல், காமெடி என்று பஞ்சாமிர்தம் படைக்கிறார். காதலியின் வீட்டு முன்னால் டீக்கடை போடுவதும், அவர் பணிபுரியும் கார் ஷோரூமுக்குச் சென்று பந்தா காட்டுவதும் பக்கா. அதுவும் சூரியும், சிவாவும் சேர்ந்தால் ங்ஙொக்கமக்கா! மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் கலாய்ப்பதும் இவர்கள் மற்றவர்களைக் கலாயப்பதும் களை - ரகளை!
குடும்பக் குத்துவிளக்காக கீர்த்தி சுரேஷ். அந்தக் கழுத்து மச்சம் ச்சோ ச்வீட்!
ரொம்ப நாள் கழித்து என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா உன் மேல ஒரு கண்ணு என்று எல்லாப் பாடல்களையும் தெறி ஹிட் கொடுத்திருக்கிறார் இமான். இடையிடையே பி.ஜி.யில் வரும் பொருத்தமான பழைய பாடல்கள் பட்டாசு.
ராஜ்கிரண் செத்துப் போகும் காட்சி சும்மா போங்கு என்றாலும் வெளிநாட்டில் இருக்கும் மகனிடம் தமிழ் கூடத் தெரியாத பேரனுக்கு என்னைப் பத்தி என்னப்பா தெரிஞ்சிருக்கும் என்று கலங்குவதும் உருகுவதும் நெகிழ்ச்சியின் தொட்டபெட்டா!
சமுத்திரக்கனி இனிமேல் நல்ல மனிதர் இமேஜைத் தூர வீசிவிட்டு இதுபோல் வில்லன் பாத்திரத்தில் தாராளமாக இறங்கலாம். கடிக்க வரும் நாயை ஒரு துண்டைச் சுற்றித் தூக்கி வீசும் காட்சியிலிருந்து எல்லாமே டெரர். அவருக்கு பத்துக்கு ஏழரை மார்க் தாராளமாகக் கொடுக்கலாம்!
பாலசுப்ரமணியெம்மின் கேமரா கரும்பு!
க்ளைமாக்ஸில் வரும் இன்னொரு பேரன் யார் எனத் தெரியும் போது தியேட்டரே அதிர்கிறது!
ரஜினி முருகன் - பொங்கலில் தீபாவளி!
குமுதம் ரேட்டிங் - நன்று





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.