கதைச் சுருக்கம்
---------------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
ரொம்ப ரொம்ப பழைய ஆள் மாறாட்டக் கதைதான் என்றாலும் விவசாயிகளின் பிரச்னையை மையமாக வைத்து போராடியிருப்பதற்காக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கும் நடிகர் விஜயக்கும் பாராட்டு நிச்சயம்.
கொல்கத்தா சிறையிலிருந்து போலீஸை ஏமாற்றி தப்பி சென்னை வந்து பாங்காக் செல்ல முயற்சிக்கும் கதிரேசன் -விஜய். விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டிய நீராதாரத்தை, கோலா தயாரிக்க உறிஞ்சி எடுக்கும் கார்ப்பரேட் கம்பெனியோடு போராடும் ஜீவானந்தம்-விஜய். ஜீவாவை எதிரிகள் சுட, தப்பிவந்த கதிரேசன் ஜீவாவாக ஆள்மாற்றம் செய்து தன்னூத்து கிராம மக்களையும் விவசாயத்தையும் முதியோர் இல்லம் உட்பட்ட மக்களையும் காப்பாற்ற படும்பாடு தான் கதை.
இரட்டை வேடம் விஜய்க்கு. நடிப்பில் நல்ல வித்தியாசம் காட்டுகிறார். ஆனால் அவரது உடல்மொழி அவரது பழைய படங்களையே நினைவூட்டுகிறது. குறிப்பாக துப்பாக்கி. என்றாலும் சண்டையில் ஆக்ரோஷம், நடனத்தில் வேகம், வசனத்தில் சூடு என்று தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். 2ஜி போன்ற ஊழல் சமாச்சாரத்தைப் பேச துணிச்சல் வேண்டும்.
சமந்தாதான் பாவம், ஏற்கெனவே காட்டிவிட்ட கவர்ச்சிபோக, மிச்சம் மீதியை மட்டுமே இதில் இறக்குமதி பண்ணியிருக்கிறார்.
சதீஷ் அடிக்கும் காமெடி சில இடங்களில் ஓ.கே. நீல் நித்தின் முகேஷின் வில்லத்தனம் சில இடங்களில் மட்டுமே கவனம்கொள்ள வைக்கிறது. விஜய்க்காக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும் முதியோர் இல்ல முதியவர்களும் கச்சித நடிப்பு.
தன்னூத்து கிராமம், டான்ஸ், சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவு அருமை.
இசை அனிருத், செல்ஃபிபுள்ள மூலம் இளசுகளின் நாடி நரம்புகளையும் ஆட வைத்துவிட்டார்.
நீர்ப்பிரச்னை, அதை நகரமக்களுக்கு உணர்த்த முதியோரை வைத்துப் போராட்டம், 2 ஜி உள்ளிட்ட ஊழல் விஷயங்கள் என்று அதிரவைத்த இயக்குநர், வலுவான திரைக்கதை அமைக்காமல் தடுமாறுவது தெரிகிறது. தேவையற்ற காமெடி, எரிச்சலான காதல் காட்சிகளை தவிர்த்திருக்கலாமே!
கத்தி: கூர்மை கம்மி.
குமுதம் ரேட்டில் : ஓ.கே
----------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
திருநெல்வேலி தானுர்த்தி கிராமத்தில் மல்டி லெவல் கம்பெனி ஒன்று ஏழைகள் நிலத்தைக் கையகப்படுத்தி குளிர்பான கம்பெனி ஒன்றை நிறுவ முயற்சிக்கிறது. எம்.எஸ்.சி. படித்த இளைஞனான ஜீவானந்தம் (விஜய்) அதைத் தடுத்து நிறுத்தி ஏழை மக்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடுவதுதான் கத்தி படத்தின் கதை, திரைக்கதை.
விஜய் ஜீவானந்தமாகவும், கத்தி கதிரேசனாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார். இதில் ஜீவானந்தம் கதாபாத்திரம் யார்? அவர் என்ன சொல்கிறார் என்று திரைக்கதை விரியும்போதுதான் படம் நிமிர்ந்து உட்காருகிறது. இன்னொரு விஜய்யும் கத்தி கதிரேசன் கொல்கத்தா சிறையில் இருந்து தப்பித்து வந்து, ஜீவா போல் வேடம் போட்டு, அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் பணிபுரிவது, சமந்தாவைக் காதலிப்பது, வில்லனுடன் மோதுவது என காதில் பூச்சுற்றலாகவே கதை நகரும்போது சலிப்பையே ஏற்படுத்துகிறது.
விவசாயிகள் மீடியா கவனத்தைத் திருப்ப நீங்கள் குடிப்பது குளிர்பானம் அல்ல, ஏழை விவசாயிகளின் ரத்தம் என்று கூறி 6 பேர் உயிரை விடும்போது மனம் நெகிழ வைக்கிறது. ஜீவானந்தம் ஆன விஜய் தங்கை தமிழ் அண்ணா, கம்யூனிசம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு, நம்ம பசி தீர்ந்ததும் அடுத்தவங்க இட்லிக்கு ஆசைப்படுவதைத் தடுப்பதுதான் கம்யூனிசம் என்று விஜய் அளிக்கும் வசனம் நச்!
மல்டிலெவல் கம்பெனி உரிமையாளரான வில்லனுடன் திருநெல்வேலி சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் விஜய்யிடம், அந்த இடத்தை விற்க உதவி செய். உனக்கு 3 மடங்கு லாபம் தருகிறேன் என்று பேரம் பேச... விஜய் மறுக்க.. உனக்கு இந்த இடத்தில் உரிமை இருக்கா? என்று விஜய்யிடம் கேட்க, விஜய் இல்லை என்று தலையாட்ட, அப்படி என்றால் 4 ஜாதி 2 மதத்தில் உனக்கு என்ன உறவு? என்று இன்ஸ்பெக்டர் கேலியாய் கேட்பது, இன்றைய நாட்டு நடப்பை புட்டுப்புட்டு வைக்கிறது.
காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளின் பிரச்னை நகரத்தில் வாழும் மக்களுக்குத் தெரிவதில்லை. ஒருநாள் சென்னையில் தண்ணீர் வரவில்லை என்றால் என்ன கூப்பாடு போடுகிறார்கள். எத்தனையோ விவசாயிகள் தண்ணீர் இன்றி தங்கள் இடத்தை, சொந்த மண்ணைவிட்டு வேறு ஊரில் கூலி வேலைக்குப் போகிறார்கள் என்று விஜய்யைப் பேச வைத்து நிலத்தடி நீரைப் பற்றிய விழிப்புணர்வைப் படமாக எடுத்துப் பாடமாகக் காட்டியதற்கு சபாஷ் சொல்லலாம்.
அனிருத்தின் இசை படத்துக்குப் லாபம். சமந்தா கவர்ச்சிக்கு மட்டுமல்ல, கதைக்கும் சரியாகப் பயன்படத்தப் பட்டிருக்கிறார்.
சென்னையில் மூன்று நாள் தண்ணீர் இல்லாமல் செய்தால் மீடியா நம்மைத் திரும்பிப் பார்க்கும் என்று விஜய் செய்யும் ஐடியா பூச்சுற்றல், அரசாங்கமும் போலீஸும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகக் காட்டியிருப்பது விவாதத்துக்குரியது.
கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் நாயகன் கதிரேசன் சண்டை போடும்போது இன்னொரு நாயகன் ஜீவா வேடிக்கை பார்ப்பது உறுத்தலாயிருக்கிறது. எது எப்படியோ...
கத்தி - பதம்.


























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!