கதைச் சுருக்கம்
-------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
லாரிக்குப் பின்னால இருக்கிற விளம்பர வாசகங்களில் ஒண்ணுதான் நெருங்கி வா! முத்தமிடாதே! அப்படின்றது. மத்தபடி வேறெதையும் எதிர்பார்த்துத் தியேட்டருக்குப் போனால் கம்பெனி பொறுப்பானது.
நாடு முழுக்க டீசல் ஸ்ட்ரைக் நடக்குறபோ காரைக்கால்ல இருக்கிற தீவிரவாதி, கடல்வழியே தப்பிக்கிறதுக்கு அர்ஜன்டா டீசல் தேவைப்படுது. அப்பாவியான கதாநாயகனை, விஷயத்தை மறைச்சிட்டு டீசல் கொண்டு போறதுக்குப் பயன்படுத்தறாரு வில்லன். (வழுக்கைத் தலையாயும், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோட, கூட எப்பவும் அடியாளோட இருக்கிறதால் அவரை வில்லன்னு ஈஸியாக் கண்டுபிடிச்சிடலாம்). அந்த விபரீதம் தெரியாம கதாநாயகன், (லுங்கி கட்டிகிட்டு, தாடியும் வச்சிருக்கிறதால அவர் தான் கதாநாயகன்னும் செம ஈஸியாகக் கண்டுபிடிச்சிடலாம்) லாரியில டீசல் எடுத்துகிட்டுக் காரைக்கால் போறார்.
வெறும் லாரிப் பயணத்தை மட்டும் காண்பிச்சால் கோவிச்சுக்குவீங்க இல்லியா? அதனால லாரி போகும்போது, தமாஸ்காரரு ஒருத்தரு, வேவ்வேற சாதியைச் சேர்ந்த ஓடிவர்ர காதல் சோடிங்க ஒண்ணு, ம்ம்ம் அப்புறம் காமமா, காதலா, நட்பா, அல்லது எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான ஒண்ணான்னு தெரியாத (அட! நமக்குத் தெரியாத) பைக் விபத்து சோடி ஒண்ணும் லாரிக்குள்ளாற எறிக்கிறாங்க. ஒரு ஸ்டேஜுல கதாநாயகனுக்கு எப்படியோ உண்மை தெரிஞ்சு, கட்டக் கடோசீல போலீஸ் வழக்கம் போல வந்து, எல்லாம் சுபம். அப்பத்தாங்க லுங்கி, தாடி அப்புறம் லேசான ரவுடித்தனம் இருக்கிறதால கதாநாயகன் மேல ஒரு பொண்ணுக்கு கிரிகிரியாயிருது.
ஏதோ ஒரு எஸ்.எம்.எஸ். மூலமா தீவிரவாதிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்கிறதா சில ஆப்பீசருங்க போகிற போக்கில அடிச்சு விடறாங்க. அது என்னான்னே புரியலை. படம் முடிஞ்சு வெளிய வந்த பலரையும் கேட்டோம். முறைச்சிட்டுப் போறாங்களே தவிர யாரும் சரியா பதில் சொல்லலை.
தம்பி ராமையாவுடைய அதே பிராண்டட் நடிப்பு அலுப்பூட்டுது. படத்தின் ஆரம்பித்தில் இருக்கும் படு விரசமான கரப்பான் பூச்சி டயலாக்கைத் தவிர்த்திருக்கலாம். ஞான் சோறு தரும் அப்படின்னு ஆரம்பத்தில் மலையாளம் பேசும் அம்பிகா, பத்துப் பதினஞ்சு நிமிசத்துல நல்ல தமிழ் பேசி, பட்டையக் கிளப்புறது ஒரு மெடிக்கல் மிராக்கிள்!
ஒரு சில சீன்களே மட்டும் படத்தில் வந்தாலும், லட்சுமி ராமகிருஷ்ணன் அட்டகாசமாகச் செஞ்சிருப்பாங்க. என்னா ஒரு மிடுக்கு! என்னா ஒரு கம்பீரம்!
படத்தில தேசபக்திக்கோசரம் துக்களியூண்டு மெசேஜ் மறைமுகமா இருக்கு. ஆனால், தலைவாசல விஜய் ஒரு சீன்ல வந்து, மொதல்ல லைஃபில் செட்டில் ஆவுங்க. அப்புறமா லவ் பண்ணுங்கனு கண்டிஷனா மெசேஜ் சொல்லிட்டு உடனடியா காணாம போயிடுறார்.
படத்துல பாராட்டவேண்டிய முக்கியமான அம்சம் மிகவும் துல்லியமான ஒலிப்பதிவு! வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. அதையும் பாராட்டணும்.
பாடல் வரிகள், அப்புறம் பாட்டெல்லாம் பத்தி ஒண்ணுமே சொல்லலையேங்கறீங்களா? எதாச்சு நினைவுல இருந்தா வச்சுகிட்டு இல்லைன்னா சொல்லப் போறேன். என்னாங்க நீங்க?
மொத்தத்தில் நெருங்கி வா! நிறைய எதிர்பார்க்காதே!
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.