கதைச் சுருக்கம்
------------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
விளையாட்டுத் துறையில் அரசியலும், வியாபாரமும் நுழைந்தால் நடக்கும் அநியாயமே படத்தின் ஒருவரிக்கதை.
குத்துச் சண்டையில் தோற்றதால் தந்தை அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்ள, தந்தையை வென்றவரின் மகனை அதே குத்துச் சண்டையில் தோற்கடிக்கிறார் மகன் ஜெயம்ரவி. அதுவரை வடசென்னையின் குத்துச் சண்டை கலாச்சாரமாக போகும் கதை, டி.வி. மீடியாவை வைத்து பிரகாஷ்ராஜ், உலக வியாபாரமாக்கும் தந்திரத்தால் சூடுபிடிக்கிறது. ஜெயம்ரவி அதை எப்படித் தடுக்கிறார் என்பது மீதிக்கதை.
ஜெயம்ரவியின் உடல்மொழி நிஜ குத்துச் சண்டை வீரரை கண்முன் நிறுத்துகிறது. தந்தை தோற்ற இடத்தில் தான் ஜெயிக்க வேண்டும் என்ற அவரது தாகம், வெறி, கோபம் இயல்பான நடிப்பு. அமெரிக்க மாமிச மலையுடன் அவர் மோதும் இடங்கள் கைதட்ட வைக்கின்றன.
ஜெயம்ரவியின் படங்களை உடல் முழுவதும் டாட்டூ குத்திக் கொள்ளும் கிளுகிளுப்பு என்ற அளவிலேயே த்ரிஷா நிற்கிறார்.
பிரகாஷ்ராஜ் - பார்த்துப் பார்த்து சலித்துப்போன வில்லத்தனம். என்றாலும் பூலோகத்தின் ஒவ்வொரு குத்தையும் காசாக்கும் அவரது உத்தி வில்லத்தனத்தின் ஹைலைட்.
நாதன் ஜோன்ஸ், சண்முகராஜன், பொன்வண்ணன் பொருத்தமான தேர்வு. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வடசென்னை மண்வாசனை தூக்கல், ஜனநாதன் வசனங்கள் வியாபாரிகளின் மனசாட்சிக்கு சுளீர்.
சாதாரண குத்துச் சண்டையை வியாபாரிகள் எப்படி காசாக்குகிறார்கள் என்று துணிந்து சொன்ன, அறிமுக இயக்குநர் கல்யாண கிருஷ்ணனை பாராட்டலாம். என்றாலும் பல படங்களில் பார்த்த நீண்ட நேர குத்துச் சண்டைகள் ஒரே டென்ஷன்!
பூலோகம் - அடிதடி லோகம்!
குமுதம் ரேட்டிங் - ஓகே















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!