கதைச் சுருக்கம்
---------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
சென்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் காணாமல் போன வைகைப் புயல், இந்தப் பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் கரைபுரண்டு வெள்ளமாக வந்திருக்கிறது!
இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசக் காட்சிகளோ இல்லாமல் உடல் மொழியாலும், பேச்சாலும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குதூகலப்படுத்த தன்னை விட்டால் ஆள் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் வடிவேலு.
கதை?
அன்னிய முதலீட்டை நாட்டுக்குள் விட்டால், பொதுமக்களும், வியாபாரிகளும் எப்படி பாதிப்பார்கள் என்பதை மன்னர் காலத்து பேக்ரவுண்டில், எல்லோரக்கும் தெரிந்த சில தெனாலிராமன் கதைகளையும் சேர்த்து சொல்லியிருக்கிறார்கள்.
நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பும் மன்னனை, அவரது மந்திரிகள் ஏமாற்றி கல்லா கட்ட, மன்னனைக் கொல்வதற்காக வரும் கிளர்ச்சிக்காரனான தெனாலிராமன், திடீர் மந்திரியாகி, மன்னனையும் நாட்டையும் காப்பாற்றி, மன்னன் மகளையும் கைப்பிடிக்கிறார்.
வடிவேலுவுக்கு இரட்டை வேடம் ஏகப்பட்ட மனைவிகள், ஏகப்பட்ட குழந்தைகள் என்று மகாராஜாவாக ஒன்று. மதியூக மந்திரியாக மற்றொன்று. குழந்தையாக நடித்து, கீழே விழுந்து கால்களை உதைத்து அவர் கதறும் காட்சி ஒன்றே போதும் நடிப்பு அசுரன் பட்டத்தை சுலபமாகத் தூக்கிக் கொடுத்துவிடலாம்!
கதாநாயகியாக மீனாட்சி தீட்சித். கூல்! ஆளுக்குப் பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்கள். மாதுளை! சென்னை வெய்யில் ஒத்துக் கொள்ளவில்லை போலிருக்கிறது. குறைந்த ஆடையில் உள்ளம் கவர்கிறார்!
ராதாரவி உள்ளிட்ட ந(யவஞ்சக)வரத்தின மந்திரிகளும் கிச்சுகிச்சு.
ஐந்து நிமிடமே வந்தாலும் மன்சூர் அலிகான் கலகலக்க வைக்கிறார்.
படத்தின் பலம் ஓர் இளைஞரின் தகதக வசனம், அவரது பெயர் ஆரூர்தாஸ்.
பானைக்குள் யானையை நுழைப்பது, கிணற்றுக்குள் திருடர்கள் இறங்குவது, காயம் பட்ட மன்னனிடம் எல்லாம் நன்மைக்கே என்று சொல்வது போன்ற அனைவருக்கும் தெரிந்த தெனாலிராமன் கதைகளையே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் புதிய கதைகளையும் சேர்த்திருக்கலாம்.
இமானின் இசையில் ஆணழகு பெண்ணழகு பாடல் அழகு!
குட்டிக் கதைகள், சீன தேசம், கிராஃபிக்ஸ் காட்சிகள், நகைச்சுவை என்று தொய்வு ஏற்படாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன். மன்னருக்குப் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மகாராணி அமர்ந்திருப்பது கவன ஈர்ப்பு.
பல இடங்களில் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியை நினைவுபடுத்துகிறது.
தெ.ரா. - லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்!
ஆஹா - வடிவேலு, வடிவேலு, வடிவேலு
ஹிஹி - தெரிந்த கதைகள், யூகிக்க முடிந்த காட்சிகள்
குமுதம் ரேட்டிங் - ஓகே.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!