கதைச் சுருக்கம்
உதயநிதி ஸ்டாலின், சரவணனாக., சிக்கன் கட்சிக்கு தலைவராகி, சிக்கென்ற உடம்புக்கு சொந்தக்காரரான ரெஜினா கசாண்ட்ராவுடனும் சிரிப் பழகி ஸ்ருஷ்டி டாங்கேவுடனும் டூயட் பாடி தனக்கு முற்றிலும் புதிதான காமெடி காட்சிகளிலும் சீரியஸாகவே நடிக்க முயற்சித்து ரசிகர்களை சீட்டில் நெளிய விடுகிறார்.
ரெஜினா கசாண்ட்ரா., தன் முந்தைய தமிழ் படங்களைக் காட்டிலும் இதில் ஒவர் சம்பள மென்பதாலும், உதயநிதியின் படமென்பதாலும், தேன்மொழி எனும் தன் பாத்திரப் பெயருக்கு சம்பந்தமில்லாத ஒவர் கிளாமரில் அனைத்து ஆண்கள் தரப்பினரையும் உசுப்பேற்றியிருகிறார். மற்றபடி அவர் நடிப்பு பற்றி பெரிதாய் குறையோ, நிறையோ சொல்வதற்கில்லை.
சரவணன் - உதயநிதியின் கல்லூரி காலத்தில், தேன்மொழி - ரெஜினா, ஊரில் இல்லாத சமயத்தில்... உதயநிதிக்கு விதவிதமாக பிரியாணி தந்து அவர் மனம் கவர நினைக்கும் ஒன்சைடு காதலியாக ப்ளாஷ்பேக்கிலும், அதன்பின், எதிர்பாராமல் தன் ஆசை நிராசை ஆனதால் ஆவியாய், ஆன்மாவாக உதயநிதியின் ரெஜினா மீதான காதலுக்கு உதவும் பாத்திமாவாக சிரிப்பழகி ஸ்ருஷ்டி டாங்கே சிறப்பு.
கட்சி தலைவனாக வேண்டிய காலத்தில், உதயநிதியின் உபத்திரவத்தால் துபாய் போய் ஒட்டகம் மேய்த்து திரும்பும் ரெஜினாவின் சித்தப்பா கல்யாணமாக சூரி, படத்தின் முன் பாதியை கலகலப்பு குன்றாது பார்த்துக் கொள்ளும் நாயகரின் காமெடி நண்பர் பாபுவாக யோகி பாபு, ரெஜினாவுக்கு நிட்சயிக்கப்படும் இரண்டாங் கெட்டான் மாப்பிள்ளை ஆக சாம்ஸ், ரெஜினாவின் அப்பாவாக லிவிங்ஸ்டன், உதயநிதியின் அப்பாவாக ரைடக்டர் ராஜசேகர், சாம்ஸின் அடாவடி அப்பாவாக மன்சூர் அலிகான், அவரது முறையான பொண்டாட்டியாக அங்காடித்தெரு சிந்து, காமெடி களேபர (?) நாட்டாமைகள்... மகுடு-சகுடு வாக முறையே ரவி மரியா, ரோபோ ஷங்கர், ஒத்தப் பாட்டுக்கும், ஒரு சீனுக்கும் செம குத்துப்போட்டிருக்கும் ஜிகினாஸ்ரீ -ரிஷா... உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமும் தியேட்டரை சதா சர்வ நேரமும் சிரிப்பலையில் மூழ்கடிக்க படாத பாடுபட்டிருக்கிறது பாவம்.
இசைஞர் டி.இமான் இசையில், எம்புட்டு இருக்குது ஆச..., முனியாண்டி முனியாண்டி..., லாலா கட சாந்தி.. உள்ளிட்ட பாடல்கள் படத்திற்கு பெரும் பலம். ஒளிப்பதிவாளர் கே.ஜி வெங்கடேஷின் ஒளிப்பதிவும் அப்படியே. கே.ஆனந்த லிங்ககுமாரின் படத்தொகுப்பில் பின்பாதி படம் மொத்தமும் அவரது பெயர் மாதிரியே சற்றே பெரும் நீளம்.
எஸ்.எழிலின் இயக்கத்தில் கதையே இல்லாமல், காமெடியையும் (அதுவும் நிறைய காட்சிகளில் கடியாக இருப்பது...) , பாத்திமாவின் ஆவியையும் மட்டுமே நம்பியிருப்பதும் பெரும் பலவீனம். படத்தின் டைட்டில் நாயகரான சரவணன் எனும் உதயநிதி, காதல், கட்சி... உள்ளிட்ட எதிலும், எதையும் தனியாக சாதிக்கவில்லை. பாத்திமா - சிருஷ்டி டாங்கேவின் ஆவி தான் அனைத்தையும் சாதிக்கிறது... எனும் போது, படத்திற்கு பாத்திமா இருக்க பயம் ஏன்? என்றல்லவா தலைப்பு இருந்திருக்க வேண்டும்..? என்பதில் தொடங்கி... கதையே இல்லாமல் கதை பண்ணியிருப்பது வரை... ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் குறைகள் சரவணன் இருக்க பயமேன் படத்தை சரியாக ரசிக்க விடாது இம்சை செய்கின்றன!
ஆக மொத்தத்தில், சரவணன் இருக்க பயமேன் - சற்றும், எழில் - உதயநிதியின் முந்தைய படங்கள் மாதிரி சரியாக இல்லை என்பது நிஜமே! அதனால், பயமே!
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!