கதைச் சுருக்கம்
----------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
மீண்டும் ஒரு சாண்டில்யன் டைப் படம்!
மன்னனுக்கு வாரிசாக ஆண் குழந்தை பிறக்காவிட்டால் நாட்டை சூறையாட பங்காளிகளும் எதிரிகளும் திட்டம் தீட்ட, பெண் குழந்தையே பிறக்கிறது. அந்த பெண்ணை ஆண் என்று சொல்லி ஆணாகவே ராஜ குடும்பம் வளர்க்கிறது. உண்மை ஒரு நாள் தெரியுமாபோது ருத்ரமாதேவி என்ன முடிவெடுத்தாள் என்பதுதான் கதை. (இயக்கம் குணசேகர்)
ராணி வேடம் என்றால் அனுஷ்காவை (விசில் பறக்கிறது) அடித்துக் கொள்ள ஆள் இல்லை. குதிரை மேல் குதிரை! அந்தக் கம்பீரமும், வீரமும், கனிவும், கோபமும் அப்படியே அள்ளிக் கொண்டு போகிறது. ஆண் போல தோன்றும் காட்சிகளிலும் அட! ஒரு பெண்ணால் வீட்டைத் திருத்தும்போது நாட்டைக் காப்பாற்ற முடியாதா? வசனம் அங்கங்கே மின்னல் அடிக்கிறது.
படத்தின் மிகப் பெரிய பலம் வி எஃப் எக்ஸ். போர்ப்படையில் நாக வியூகத்தையும் கருட வியூகத்தையும் கண் முன்னே 3 டி காட்டும் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. அஜயனின் ஒளிப்பதிவுக்கு ஒரு கூர்வாள் பரிசு.
காதலுக்கு பாகுபலி ராணாவும், லேசான புன்னகைக்கு அல்லு அர்ஜூனும்!
நிறைவாகச் செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். நல்ல வேளை அவரை வில்லனாகவோ சாகடிக்காமலோ விட்டார்கள்!
பின்னணி இசையில் தான் எப்போதும் முன்னணிதான் என்று சொல்கிறார் இளையராஜா.
மெட்ராஸ் கேத்தரினும், நித்யாமேனனும் சும்மா அழகு காட்டுகிறார்கள். ருத்ரமாதேவி ஒரு பெண் என்பதை நித்யா ஏற்கெனவே தெரிந்து வைத்திருப்பது கவிதை.
கேரக்டர்களின் பெயர்களில் எல்லாம் சுந்தரவாடையைத் தவிர்த்திருக்கலாம்.
ருத்ரமாதேவி - பெண்களின் ராணி.
குமுதம் ரேட்டிங் - ஓகே
-------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
காக்கத்திய தேசம் எட்டு சிற்றரசர்களை உள்ளடக்கியது. அதை ஆளும் கணபதி தேவருக்குப் பிறக்கும் பெண் வாரிசு ருத்ரமாதேவி. ஆனால், நாட்டுமக்கள் ஆண் வாரிசு இருந்தால்தான் நம்மையும் நாட்டையும் காப்பாற்ற முடியும் என்று ஆண் வாரிசுக்காகத் தவம் இருக்கிறார்கள்.
எதிரிநாடான தேவகிரிநாட்டைச் சேர்ந்த மகாதேவன் காக்கத்திய நாட்டின் மீது எந்த நேரமும் போர்த்தொடுக்கும் அபாயம் சூழ்கிறது. நாட்டுக்குள்ளேயே பங்காளிகளான ஹரிஹர தேவர் (சுமன்) ஆண் வாரிசு இல்லாமல் போனால் நாட்டைக் கைப்பற்றும் திட்டம் வகுத்து வருகிறார். இவற்றையெல்லாம் முறியடிக்க மந்திரி சிவதேவ அய்யா (பிரகாஷ்ராஜ்) பிறந்த ருத்ரமாதேவியை இளவரசர் ருத்ரதேவர் என்று பொய் சொல்லி காட்டுக்கு அழைத்துச் சென்று 14 வருடம் போர் பயிற்சி தருகிறார்.
பெண்ணாக இருந்தாலும் நாட்டைக் காப்பாற்ற முடியும். பெண் பஞ்சணைக்கும் எடுபிடி சேவைக்கும் மட்டுமல்ல, நாடாளவும் முடியும் என்று செய்து காட்டி வெற்றி வாறை சூட வைக்கிறார்.
அழகும் ஆளுமையும் ஒருங்கே பெற்ற ருத்ரமாதேவி அரசியாகப் படம் முழுக்க கர்ஜிக்கிறார் அனுஷ்கா. தன் மக்களுக்காக அனுஷ்கா பேசும் வசனம் இன்றைய நாட்டுநடப்பை எடுத்துக் காட்டுகிறது. அவரது மயக்கும் அழகும், ஆக்ரோஷமான நடிப்பும் பளிச்சிடுகின்றன.
இளவரசியாக வரும் நித்யா மேனன், கேத்ரின் தெரஸாவும் நடிப்பிலும் அழகிலும் ஒரிஜினல் இளவரசிகளாகவே ஜொலிக்கிறார்கள். நித்யாமேனன் கதையோடு கலந்து தனிக்கவனம் பெறுகிறார்.
சாளுக்கிய வீரபத்ரனாக வரும் ராண டகுபதி அனுஷ்காவை காதலித்து, பின்னர் அனுஷ்கா நம்மைவிட நாட்டைக் காதலிக்கிறார் என்று ஒதுங்கும்போது சபாஷ் போட வைக்கிறார்.
கோனா கன்னாவாக வரும் சண்டி வீரர் அல்லு அர்ஜூனா, ராணி ருத்ரமாதேவியைக் காக்கும் மாவீரனாக வந்து படம் முழுக்க ராஜ்யம் செய்கிறார்.
இசைஞானி இளையராஜா பின்னணி இசை பிரமாதம். பாடல்கள் அமர்க்களம். தோட்டா தரணியின் அரங்க அமைப்பு ஹாலிவுட் தரம். ஒவவொரு காட்சிக்கும் அவர் உழைப்பின் முக்கியத்துவம் தெரிகிறது.
அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவில் அனுஷ்காவை ருத்ரமாதேவனாக காட்டும்போது, ருத்ரமாதேவியாக காட்டும்போதும் அழகோ அழகு. திருஷ்டி சுத்திப் போடவேண்டும். நீட்டா லுல்லாவின் உடை அலங்காரத் தேர்வு ஒரிஜினல் நகைகளை அனுஷ்காவுக்கு பூட்டி அழகு சேர்த்தவிதம் ஆஹா ரகம்.
பிரம்மாண்டம், கடின உழைப்போடு கதையிலும் விறுவிறுப்பைக் கூட்டி பிரமிக்க வைத்துள்ளார் இயக்குநர் குணசேகர்.
ருத்ரமாதேவி - உச்சம்
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!