கதைச் சுருக்கம்
---------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
முன்னொரு காலத்தில், (மைக்) மோகன் அடுத்தடுத்து நடித்த மூன்று படங்கள் ஒரே வளாகத்தில் இருக்கும் மூன்று திரையரங்குகளில் காட்டப்பட்டதாகச் சொல்வார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது விஜய் சேதுபதிக்க அந்தச் சிறப்பு கிடைத்திருக்கிறது. அவர் அதை தக்கவைத்துக் கொள்ள நினைத்தால் படத் தேர்வில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது
தென்னந்தோப்பில் பிரம்மாண்டமான திரையில் விளையாட்டுகளை ரசிக்கும் கபீர்சிங் மற்றும் அவரது எதிரி ஹரீஷ் உத்தமன் தோன்றும் ஆரம்பக் காட்சியில் குபீரென்று படம் வேகம் எடுப்பதென்னவோ உண்மைதான். கொஞ்ச நேரத்திலேயே வேகம் மங்கிவிடுகிறது. ஏற்கெனவே சிலபல படங்களில் பார்த்துத் தேய்ந்த கதை மற்றும் காட்சியமைப்புகள் அலுப்பை உண்டாக்குகின்றன.
காதல் ஜோடிகளைச் சேர்த்துவைக்கும் வேலை நம்ம ஹீரோவுக்கு. ஆனால் அவர் வக்கீலாம். போகிற போக்கில் அப்பா கே.எஸ். ரவிகுமார் அடித்துவிடும் பேச்சில் இருந்து நாம் அதை அவதானிக்க வேண்டியிருக்கிறது. அதன் பிறகு - படம் முடியும் வரையிலும் - அவர் எந்தக் கோர்ட்டிலும் வாயைத் திறந்து பேசவில்லை. கோவையில் ஒரு ஃபுட் கோர்ட்டில் தேவையான அளவு பேசுகிறார். அவ்வளவுதான்!
நூற்றுக்கணக்கான ஆட்களைத் தனியொருவராக விஜய்சேதுபதி தூக்கித் தூக்கி வீசுகிறார். அவர்களில் பலரும் ஏற்கெனவே உடையத் தயார் நிலையில் இருக்கும் கார் கண்ணாடிகள், கதவுகள், மேசைகள் மீது விழுந்து சிதறவைக்கிறார்கள். அடேங்கப்பா! ஆனால் படா படா தாதாக்கள், மிகப் பெரிய அரசியல்வாதி என்று யாரிடமும் சின்னத் துப்பாக்கிகூட இல்லாமல் இருப்பது மிகப் பெரிய ஆச்சர்யம்.
கதாநாயகி லட்சுமி மேனன், முகத்தில் லேசான தழும்போடும் மிகை ஒப்பனையோடும் திகழ்கிறார். அவரது முக்கியமான நடிப்பு, விஜய் சேதுபதி நடந்தாலும் பேசினாலும் எதிரிகளோடு மோதினாலும் வேறு என்ன செய்தாலும் ஒரு மாதிரி கிறக்கப் பார்வை பார்ப்பதுதான்.
இமாம் இசையமைப்பு சண்டைக் காட்சிகளில் அமர்க்களமாக இருக்கிறது. விர்ர் பாட்டு கிர்ர்ர்ர்ரடிக்கவைக்கும் சூப்பர் அதகளம்! விஜய் சேதுபதியின் யதார்த்தமான நடிப்பும் தனிப்பட்ட உச்சரிப்பும் படத்துக்குப் பெரும் பலம்.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக் கட்டக் கடைசியில் ஆறாம் கிளாஸ் பையன், டியூஷன் டீச்சரிடம் ஐலவ்யூ சொல்வதாகக் காட்சி வைத்திருக்கிறார்கள். பின்னாளில் லவ் என்றால் அன்பு என்று பையன் சேதுபதி உணர்ந்து கொள்வதாக ஒரு சமாளிப்பு வேறு
மொத்தத்தில், றெக்க - மொக்க.
திரையரங்கில் முதுநிலை ஆசிரியர்கள் பல்லடம் முகமது அயூப் மற்றும் ஒண்டிப்புதூர் கணேசன் கருத்து. விஜய் சேதுபதி படம்னா விடமாட்டோம். இத மாதிரி படங்களை அவர் தவிர்ப்பது நல்லது. படம்... ம்ஹூம்...
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.