கதைச் சுருக்கம்
-------------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
பாண்டியநாடு படத்தில் ஹிட் கொடுத்த விஷால் - சுசீந்திரன் கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு அதிகம். ஆனால் பாதிக் கிணறுக்குத்தான் இந்தப் புலியால் பாயமுடிந்திருக்கிறது.
மதுரையில் பணக்காரர்களாகப் பார்த்து மிரட்டி பணம் பறிக்கிறது ஒரு கும்பல். பணம் கொடுத்தால் உயிர், இல்லாவிடில் பிணம். இந்தக் கும்பலை வேரோடு சாய்க்க ஒரு போலீஸ் அதிகாரியாக விஷால். அவரும் சுட்டுச் சுட்டுத் தள்ளுகிறார்.
மாஃபியா கும்பல் தலைவன் தன் சொந்த அண்ணன் சமுத்திரக்கனி என்று தெரியவரும்போது மனசு சுடுகிறது. குடும்ப சென்டிமெண்டில் கொஞ்சம் கதை நிமிர்ந்து உட்கார்கிறது.
அசிஸ்டெண்ட் கமிஷனர் தோற்றத்திற்கு விஷாலின் உயரமும் மிடுக்கும் பொருந்துகிறது. ஆனால் காஜலுடனான டூயட் புலிப் பாய்ச்சலுக்கு ஸ்பீட் பிரேக். க்ளைமாக்ஸில் தன் அப்பாவைக் கொல்லத் துணியும் அண்ணனைத் தீர்த்துக் கட்டுவதில் காட்டும் ஆக்ரோஷமும் சகோதர பாசத்தில் தவிப்பதும் டாப். காஜலுக்கு காதலும் டூயட்டும் வாங்கிய சம்பளத்திற்காக தேமே என்றாகிவிட்டது.
பின்பாதி படத்தைச் சுமப்பவர் அண்ணனாக வரும் சமுத்திரக்கனிதான். அரசியல் வெறிதான் தன்னை கெட்டவனாக செயல்பட வைத்தது என்று அவர் பணத்திற்காக செய்யும் கொலைகள் அதிர்ச்சிக்குப் பதிலாக எரிச்சலைத் தருகிறது.
மனைவியிடம் ஹெல்மெட்டோடு குளிக்கப்போய் மாட்டிக் கொள்ளும் சூரி மட்டுமே சிரிக்க வைக்கிறார்.
நேர்மையான காவல் அதிகாரியாக ஆனந்தராஜ், அமைச்சராக ஆர்.கே., காஜலின் பணக்கார அப்பாவாக ஜெயப்பிரகாஷ், மனோஜ்குமார், அருள்தாஸ், விஷாலின் அப்பாவாக வேலராமமூர்த்தி என்று பலரின் நடிப்பும் படத்திற்க பெரிய பக்கபலமே.
டி. இமானின் இசையில் மதுரக்காரி, சிலுக்குமரமே.. பாடல்கள் கேட்கும் ரகம். வேல்ராஜின் ஒளிப்பதிவு பளிச் பளிச். எடிட்டிங்கும் பெரிய ப்ளஸ். இவ்வளவு இருந்தும் இயக்குநரால் படத்தைத் தூக்கி நிறுத்த முடியவில்லை. கிளைமாக்ஸால் மட்டுமே சுசீந்திரன் பாய்கிறார்.
பாயும் புலி: பாதிக் கிணறு பாய்ந்த புலி.
குமுதம் ரேட்டிங்: ஓகே





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.