கதைச் சுருக்கம்
குமுதம் விமர்சனம்
உரிமைக்காக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒலிக்கும் குரல்களும் போராட்டங்களும் எவ்வாறு நசுக்கப்படுகின்றன என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கும் படம் மாவீரன் கிட்டு.
பொதுவழியில் தலித்தின் பிணம் ஏன் போகக்கூடாது ஆணும் பெண்ணும் விரும்பிச் சேர்வதில் சாதிக்கு அங்கே என்ன வேலை இருக்கிறது? எனறு கேட்கும் கேள்விகள் ஏராளம்.
கதை என்று பார்த்தால் காலந்தோறும் நடைமுறையில் நிகழ்வதும் தமிழ் சினிமாவில் பேசப்பட்டதும்தான் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற மாணவன் மாநிலத்தில் முதல் மார்க் வாங்குகிறான். கலெக்டராகிவிட்டால் தன் இன மக்களுக்கு ஒரு விடிவுகாலத்தைக் கொடுக்கலாம் என்று ஆசைப்படுகிறான். அதைப் பிடிக்காத ஆதிக்க சாதியினர் அவனை ஒரு கொலை வழக்கில் சிக்கவைத்து அவன் கனவுகளை சிதைக்கிறார்கள். அதில் அவன் வென்று தன் மக்களுக்கான உரிமையை வாங்கித் தந்தானா என்பதுதான் படம் முழுக்கப் பேசப்படும் விஷயம்.
கிட்டுவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் விஷ்ணுவிஷால். பாக்யராஜ் ஸ்டைல் கிராமத்து இளைஞனுக்குப் பொருத்தம். பாம்பு கடித்த மேல் ஜாதி பெண்ணைத் தொட்டுத் தூக்கிக் காப்பாற்றும் விஷ்ணு யதார்த்தம். அதெப்படி நீ அவளைத் தொட்டுத் தூக்கலாம் என்று விஷ்ணு கன்னத்தில் அறையும் மேல் சாதிக்காரனிடம் தப்புதான் மன்னிச்சிடுங்க என்பது சினிமாவில் காணாத படுயதார்த்தம். சபாஷ்.
ஸ்ரீதிவ்யா கிராமத்து அழகை பூசிக் கொண்டாலும், சினிமாத்தனம் இல்லாமல் நடித்திருப்பது அழகு.
படத்தின் ஹீரோ பார்த்திபன் என்று சொல்லும் அளவிற்கு அத்தனை நிறைவு அவர் நடிப்பில். சின்ராசு அண்ணனாக வந்து பல இளைஞர்களின் ரோல் மாடலாகிறார்.
சாதி வெறி பிடித்த வில்லனாக வரும் நாகிநீடு, இன்ஸ்பெக்டர் செல்வராஜாக வரும் ஹரீஷ் உத்தமன் ஆகியோர் கச்சிதம். ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வரும் ஃபெரெரா, உயர்சாதிக்காரர் என்றபோதும் மனிதநேயம் துளிர்க்க வைக்கும் பாத்திரம்.
சூரிக்கு குணச்சித்திர பாத்திரம் என்றாலும் அவரது பங்கு குறைவு.
வசனம் படத்தின் இன்னொரு ஹீரோ. காலங்காலமா அடிவாங்கிட்டிருந்தவன் திரும்பி அடிச்சா திமிருங்கிறாங்க ஒரு உதாரணம்.
ஒளிப்பதிவு எண்பதுகளின் பின்னணியையும், கொடைக்கானலின் அழகையும் அள்ளி நம்முன் கொட்டுகிறது. டி. இமானின் இசை இனிமை.
அவன் உரிமையைத்தானே கேட்கிறான் என்று ஆதிக்க சாதிக்கு புரியவைக்கும்படியான திரைக்கதையை உருவாக்கிய இயக்குநர் சுசீந்திரனைப் பாராட்டலாம்.
மாவீரன் கிட்டு: சாதிவெறிக்குக் குட்டு!
குமுதம் ரேட்டிங்: ஓகே




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.