கதைச் சுருக்கம்
-------------------------------------------------------
கல்கி விமர்சனம்
பல படங்களில் கதைக்கு இடையில் சண்டைக் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்தில் - உல்டாவாக - சண்டைக் காட்சிகளுக்கிடையில் துக்குளியூண்டு படம் இருக்கிறது. கிடாரி என்ற பெயர்க் காரணத்தைப் பற்றி யோசிக்க வேண்டாம். கதாநாயகப் பாத்திரத்தின் பெயர்தான் அது.
ரத்தம் சொட்டச் சொட்ட ஆரம்பிக்கும் படம் கடைசிவரையில் ரத்தத்தைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது.
கதாநாயகி நிகிலா, சும்மா சொல்லக் கூடாது. ஓரளவு நடிக்கவும் செய்கிறார். மூக்கு முழியுமாக லட்சணமாக இருக்கிறார். ஆனால் அவர் சசிகுமாரைக் கிள்ளும் காட்சிதான் அவலட்சணம். சென்சார் தூங்கிய காட்சிகளில் அதுவும் ஒன்று.
மறைமுகமாக சாதி உணர்வை ஊட்டும் இது போன்ற படங்கள், இளைய தலைமுறைக்குத் தவறான பாடங்களைப் புகட்டும் என்பதை மறுப்பதற்கில்லை.
பாத்திரத் தேர்வுகள் கனகச்சிதம். குறிப்பாக கொம்பையா வேடம் ஏற்ற வேல. ராமமூர்த்தி பாத்திரமாகவே மாறிப் போயிருக்கிறார். உள்ளூரில் சலம்பல் செய்யும் வயசாளி ஆகட்டும். ஓ.ஏ.கே. சுந்தர் ஆகட்டும் பிரமாதமான தேர்வு!
பழிவாங்க நூதனமான வழியைத் தேர்ந்தெடுக்கும் தம்பதி என்ன ஆனார்கள் என்று சொல்லாமலே விட்டிருக்கிறார்கள்.
தர்புகா சிவா இசையமைத்திருக்கும் பாடல்களில் இரைச்சல் அதிகம் இல்லை. அர்த்தமும் புரிகிறது. குடைவேல மரங்களும், வறண்டபூமியும்,ஒற்றைத் தார்ச்சாலையும் கதைச் சூழலின் பீதியை அதிகரிப்பது நிஜம்.
சின்னத் தம்பி பாடலை மாற்றிப் பாடச் சொல்லி வில்லனைப் பாடாயப்படுத்துகிறார் சசிகுமார். அவதிப்படுவது வில்லன் மட்டும் இல்லை. நாமும்தான்.
TCH3270, TCM9009 என்றெல்லாம் வாகனங்களின் பதிவு எண்ணை வைத்திருப்பது ஒன்றி் மூலம் கதை நடக்கும் காலகட்டத்தை லேசாக உணர வைக்க முயன்றிருக்கிறார்கள். சரி, ஆனால் கதை மாந்தர்களின் உடையிலோ, வேறு சுற்றடிச் சான்றுகள் மூலமோ அதைக் காட்சிப்படுத்தத் தவறிவிட்டார்கள்.
கொம்பையா, விரோதம் சம்பாதித்து வைத்திருக்கும் ஒவ்வொருவரின் ஃப்ளாஷ் பேக் காட்சிகளும் முடிவின்றி நிண்டு கொண்டே இருக்கின்றன.
இந்தப் படத்தில் பல மரணங்கள் நிகழுகின்றன. அவையனைத்துமே கொலைகள் என்பது ஒரு பொதுவான அம்சம்!
தியேட்டரை விட்டு வெளியே வரும்போது யாரைப் பார்த்தாலும் கத்தியை மறைத்து வைத்துக் கொண்டு நம்மை வெட்ட வருவதைப் போலவே தோன்றுகிறது. சசிகுமார் சார்! வன்முறை ஃபார்முலாவை மாற்றினால் நல்லது!
கிடாரி: ரத்தக் காட்டேரி
திரையரங்கில் ரசிகர் நீலாங்கரை எம்.ஏ. சேகர் கருத்து: தமிழகத்தின் சில பகுதிகளில் புரையோடிப் போயிருக்கும் சாதி உணர்வை, இயன்றவரை மறைமுகமாகக் கிளறியிருக்கிறார்கள். குற்றவாளிகளுடன் காவல் துறை கைகோத்திருப்பதை அம்பலப்படுத்துகிறது படம். வன்முறை அதிகம்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!