கதைச் சுருக்கம்
காஸி எனும் போர்க்கப்பலை பற்றிய படம் எனவே ஏராளமான கப்பல் சண்டைக் காட்சிகளை காணலாம் என்ற எண்ணத்துடன் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். VFX குழுவினரின் மெனக்கெடல் திரையில் மிளிர்கின்றது. கடல் அடியிலான காட்சிகளில் கிராபிக்ஸ் பணிகள் நேர்த்தியாக வந்துள்ளன. பல இடங்களில் சுமாராகவும் சில இடங்களில் சூப்பராகவும் ஒலிக்கின்றது பின்னணி இசை.
வழக்கமான தெலுங்கு பட பாணியில் மசாலா வாடை எதுவும் இல்லாமல் முதல் படத்திலேயே தனித்துவமான கதையை தேர்வு செய்து அதனை திரைக்கதையிலும் மெருகேற்றி கவனம் ஈர்க்கின்றார் சங்கல்ப் ரெட்டி. ஆனால் மசாலா பிரியர்களான டோலிவுட் ரசிகர்களுக்கு இப்படம் தீணி போடுமா என்றால் சந்தேகம்தான். அக்கட தேசத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் எனும் பெருமையை தட்டிச் செல்லும் காஸி ராணாவின் திரை உலக வாழ்க்கையில் முக்கிய இடம்பெறும் என்பது மட்டும் உண்மை
‛காஸி - கண்களுக்கு விருந்தளிக்கும் போர்க்கப்பல்!
-------------------------------------------------------------
குமுதம் சினிவிமர்சனம்
பங்களாதேஷ் பிரச்னையில் இந்தியா மேல் கோபம் கெண்ட பாகிஸ்தான், காஸி என்ற நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்தியாவின் ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலை அழிக்க சதி செய்ய, அதை இந்திய கப்பற் படை வீரர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான் காஸி படத்தின் கதை.
பாகிஸ்தான் சதித்திட்டம் உயர் அதிகாரிகளான ஓம்புரி, நாசருக்கு தெரியவரும்போதே ஒருவித பதட்டத்தை நமக்கு ஊட்டிவிடுகிறார்கள். ஒரு நீர்மூழ்கிக் கப்பலுக்குள் என்னென்ன நடக்கும் என்பதை காட்டக்காட்ட வியப்பு. கூடவே தேசப்பற்றும் சேர்த்துக் கொள்ள, சுவாரஸ்யம் கூடுகிறது.
ராணா டகுபதி, கடற்படை கேப்டனுக்கு செம பொருத்தம். நடையில் காட்டும் கம்பீரம், வசன உச்சரிப்பு எல்லாமே நமக்கு ஒரு வெறியை ஏற்படுத்துகிறது.
கோபக்கார கேப்டன் கே.கே. மேனன் அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்காமல் எதிரிகளைக் கண்டதும் அழிக்கத் துடிக்கும் ஆக்ரோஷம் டாப், அவர் இறந்த பின் ஜலசமாதி செய்வது உடம்பைப் புல்லரிக்க வைக்கிறது.
இன்னொரு கேப்டன் அதுல்குல்கர்னி இவர்களுக்கு ஈடுகொடுத்து நடித்திருப்பது கச்சிதம். அகதியாக வரும் டாப்ஸி, சிறுமி - சோகத்தை ஊட்டுகிறார்கள். இந்தியக் கப்பலான எஸ்.21ல் அதிகாரிகளாக வரும் ஓம்புரி, நாசர், வீரர்கள் என அனைவரின் நடிபபும் நம்மை ஒரு ஆழ்கடல் போரை கண்முன் காட்டிய திருப்தி. அதற்கு ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் இசையுமே முழுக்காரணம்.
ஹாலிவுட் படங்களுக்கு இணையானது என்று சொல்லும் அளவிற்கு திரைக்கதை அமைந்திருக்கும் இயக்குநர் சங்கல்ப் ரெட்டிக்கு ஒரு சல்யூட்.
காஸி, ஆஸம்!
குமுதம் ரேட்டிங்: நன்று














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.