/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தாராபுரம் தக்காளி ரூ.8க்கு விற்பனை

தாராபுரம் தக்காளி ரூ.8க்கு விற்பனை

ADDED : ஆக 04, 2010 03:36 AM


Google News

ஈரோடு:இரு மாதங்களாக 40 ரூபாய் வரை உச்ச விலையில் இருந்த தக்காளி, இரு வாரங்களாக எட்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தாராபுரத்திலிருந்து கூடை கூடையாய் இறக்கப்படுவதே விலை சரிவுக்கு காரணம்.

குறைவான உற்பத்தி, ஆந்திராவில் ஏற்பட்ட கலவரம் மற்றும் கோடையில் பெய்த மழை காரணமாக இரு மாதங்களுக்கு முன், ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி மட்டுமின்றி, பிற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து. பொதுமக்கள் வேடிக்கை பார்க்கும் அழகுக்கூடமாக காய்கறி கடை மாறியது. மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதினாலும், காய்கறி வாங்க ஆளில்லாமல் இருந்தது.இந்நிலை மே மாதம் முதல் ஜூலை 20ம் தேதி வரை நீடித்தது. தற்போது, தாராபுரம், தாளவாடி ஆகிய இடங்களில் இருந்து கூடை கூடையாக தக்காளி இறக்கப்படுகிறது. குறிப்பாக, தாராபுரம் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட தக்காளி, போதும் போதுமெனும் அளவுக்கு நேதாஜி மார்க்கெட்டில் குவிகிறது. தக்காளி வரத்து அதிகரித்திருப்பதால், ஒரு கிலோ ஆறு ரூபாய் முதல் எட்டு ரூபாயாக சரிந்துள்ளது. விலை குறைந்ததால், நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, உருளைக்கிழங்கு கிலோ பத்து ரூபாய், முள்ளங்கி 8, பீன்ஸ் 15, பழைய இஞ்சி 40, புதிய இஞ்சி 22, முட்டை கோஸ் 10, நூல்கோல் 20, பீட்ரூட் 12, கத்தரிக்காய் 10, புடலை 10, சுரைக்காய் நான்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. முருங்கைக்காய் 20, பீர்க்கங்காய் 10, கேரட் 15, சிறிய வெங்காயம் 12, பெரிய வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.



நேதாஜி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:இரு மாதங்களுக்கு முன், காய்கறி விலை ஏற்றம் விற்பனையை கடுமையாக பாதித்தது. தக்காளி விலை கடுமையாக உயர்ந்து கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், நடுத்தர, ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். தற்போது, தாராபுரம், தாளவாடி, ஆந்திரா ஆகிய இடங்களில் தக்காளி விளைச்சல் அதிகளவில் இருக்கிறது. குறிப்பாக, தாராபுரத்திலிருந்து கொண்டு வரப்படும் தக்காளி மார்க்கெட்டில் குவிகிறது. இதனால், விலை குறைந்து எட்டு ரூபாய்க்கு சரிந்துள்ளது. இன்னும் மூன்று மாதத்துக்கு சீஸணுன் இருப்பதால், மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்