/உள்ளூர் செய்திகள்/சேலம்/தடையை மீறி கோவில் விழா நடத்த "போர்க்கொடி'

தடையை மீறி கோவில் விழா நடத்த "போர்க்கொடி'

ADDED : ஆக 04, 2010 03:34 AM


Google News

சேலம்: சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் உள்ள சென்னப்பன் கோவில் விழா நடத்துவதில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே பூசல் இருந்து வந்தது.

இதையடுத்து, கோவிலை திறந்து விழா நடத்த அதிகாரிகள் தடை விதித்தனர். தடையை மீறி கோவில் விழா நடத்த முயன்று சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.சேலம் சின்னகடை வீதி அரசமரத்துப்பிள்ளையார் கோவில் தெருவில் குருமன்ஸ் பழங்குடி இன மக்களின் குல தெய்வமான, சென்னப்பன் ஸ்வாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் குருமன்ஸ் இன மக்கள் ஆண்டு தோறும் ஆடி பெருக்கு விழாவை கோலாகலமாக நடத்தி வருவது வழக்கம்.



கடந்த பல ஆண்டுகளாக மூர்த்தி என்பவர் தலைமையில் குருமன்ஸ் இன மக்கள் ஆடி பெருக்கு விழா நாளில், சென்னப்பன் ஸ்வாமி கோவிலில் திரண்டு சாமிக்கு பூஜை செய்து, பொங்கல் வைத்து, தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தி வந்தனர். மூர்த்தி தலைமையில் கோவில் விழா நடத்தி வந்த நிலையில், சென்னப்பன் கோவில் விழாவை மற்றோரு கோஷ்டியினர் முன்னின்று நடத்துவோம் என தெரிவித்தனர். சென்னப்பன் கோவில் அமைந்துள்ள இடம் பிரேமா என்பவரின் தந்தை குப்புசாமிக்கு சொந்தமானது.கோவில் நிலத்துக்கு சொந்தக்காரரான குப்புசாமியின் வாரிசுகளான பிரேமா உள்ளிட்டவர்கள் கோவில் விழாவை முன்னின்று நடத்துவோம் என தெரிவித்தனர்.  பல ஆண்டுகளாக மூர்த்தி என்பவர் தலைமையில் கோவில் விழா நடந்து வந்ததால், பிரேமா உள்ளிட்டோர் கோவில் விழாவை முன்னின்று நடத்த கூடாது என இரு கோஷ்டியை சேர்ந்தவர்களும் போர்க்கொடி தூக்கினர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்னப்பன் கோவில் உள்ள நிலையில், கோவிலுக்கு இரண்டு கோஷ்டியும் தனித்தனி பூட்டு போட்டு மூடி வைத்துள்ளனர்.



சேலம் டவுன் போலீஸில் கோவில் விழா நடத்த வேண்டி இரு கோஷ்டியை சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸார் கோவில் விழா நடத்துவது தொடர்பாக 107 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து,  ஆர்.டி.ஓ., விசாரணைக்கு இரு கோஷ்டியையும் அனுப்பி வைத்தார். ஆர்.டி.ஓ., குழந்தைவேலு தலைமையில் கோவில் விழா நடத்துவது தொடர்பாக இரண்டு தரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இரண்டு தரப்பினரும் விட்டு கொடுக்காமல் தங்களே முன்னின்று கோவில் விழா நடத்துவதில் பிடிவாதமாக இருந்தனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, கோஷ்டி பூசல் பிரச்னை ஏற்பட்டுள்ள சென்னப்பன் ஸ்வாமி கோவிலை ஆடி பெருக்கு விழாவில் (நேற்று) திறக்க கூடாது. கோவிலை திறந்து வழிபாடு நடத்தினால் கோஷ்டி பூசல் ஏற்பட்டு சட்டம்,ஒழுங்கு பாதிக்கப்படும் என கோவிலை திறக்க தடை உத்தரவு பிறப்பித்தனர். கோவில் சுவரில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி, இரு கோஷ்டியை சேர்ந்தவர்களுக்கும் நோட்டீஸ் கொடுத்தனர்.



இந்நிலையில், நேற்று காலை ஒரு கோஷ்டியை சேர்ந்தவர்கள் கோவிலை திறந்து பொங்கல் வைத்து பூஜை செய்ய சென்னப்பன் கோவில் முன் திரண்டனர். பிரச்னைக்குரிய கோவில் முன் போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸார் கோவிலை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஒரு கோஷ்டியினர் திடீரென சின்னக்கடை வீதியில் அமர்ந்து கோவிலை திறந்து வழிபாடு நடத்த வேண்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சின்னக்கடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால், வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்துனர். கோவில் விழா நடத்துவதில் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளதால், சென்னப்பன் கோவிலில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்