/உள்ளூர் செய்திகள்/சேலம்/"ஆடி18'ல் மேட்டூரில் குவிந்த பக்தர்கள்

"ஆடி18'ல் மேட்டூரில் குவிந்த பக்தர்கள்

ADDED : ஆக 04, 2010 03:30 AM


Google News

மேட்டூர்: ஆடிபெருக்கை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் மேட்டூர் காவிரியில் நீராடினர்.

கிராம காவல்தெய்வங்களின் ஈட்டி, சூலாயுதம் போன்ற ஆயுதங்களை  பக்தர்கள் மேட்டூர் காவிரியில் கழுவி புனிதமாக்கினர்.கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் 18 நாட்கள் நடந்த பாரதபோர் ஆடி 18ம் தேதி நிறைவு பெற்றது. போரில் வென்ற பாண்டவர்கள் ஆடி 18ம் நாளில் காவிரியில் தங்கள் போர் கருவிகளை கழுவி சுத்தம் செய்து, புனித நீராடி போர் நிறைவு பெற்றதை உறுதி செய்தனர்.அதர்மம் அழிந்து, தர்மம் வென்ற அந்த, 'ஆடி18' நாளையே காவிரி கரையோர பக்தர்கள் ஆடிபெருக்கு பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஆடிபெருக்கு பண்டிகையை பக்தர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடவும், டெல்டா பாசனத்திற்காகவும் கடந்த 28ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நீர்திறக்கப்பட்டது.



நேற்று ஆடிபெருக்கு பண்டிகையை முன்னிட்டு காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், கரையோர மாவட்டத்தை சேர்ந்த மக்கள் காவிரி ஓடும் தர்மபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை உள்பட 12 மாவட்டங்களிலும் ஆடிபெருக்கு விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று காவிரியில் புனித நீராட மேட்டூரில் குவிந்தனர். அனைவரும் மேட்டூர் முனியப்பன் கோயில், காவிரிபாலம், எம்.ஜி.ஆர்., பாலம் பகுதியில் காவிரியில் நீராடினார். பின்னர் அணை முனியப்பனை வணங்கி விட்டு, பூங்காவை சுற்றி பார்த்து ஊர் திரும்பினர்.கரையோர கிராமத்தை சேர்ந்த பக்தர்கள்  காவல் தெய்வங்களின் ஈட்டி, சூலாயுதம் போன்ற ஆயுதங்களை  மேட்டூர் காவிரியில் சுத்தம் செய்து, நீராடி, புனித நீரை கிராம கோவில்களுக்கு எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் நடத்தினர்.ஆடிபெருக்கை முன்னிட்டு சேலம், தர்மபுரி, ஈரோடு, தாரமங்கலம், ஜலகண்டபுரம் பகுதியில் இருந்து மேட்டூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சேலம் எஸ்.பி., ஜான் நிக்கல்சன் தலைமையில் 300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் தீயணைப்பு, மீட்பு படையினர் ரப்பர் படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்