வால்பாறை : வால்பாறை அருகே பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் டவர் அலுவலகத்திற்குள் தொடர்ந்து மூன்று நாட்கள் புகுந்த காட்டுயானையை காவலாளி ஜெனரேட்டர் இயக்கி விரட்டியடித்தார்.வால்பாறையில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பில் கவர்க்கல், வால்பாறை, வாட்டர்பால், சின்கோனா, முடீஸ், சோலையார்நகர் உள்ளிட்ட 11 இடங்களில் மொபைல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு வந்த ஒற்றை காட்டுயானை அலுவலகத்திற்குள் புகுந்தது. இதனையடுத்து உஷாரடைந்த இரவுக் காவலர் ராஜா ஜெனரேட்டரை இயக்கினார். இதனால் பயந்து போன காட்டுயானை வனப்பகுதிக்குள் அலறியடித்து ஓட்டம் பிடித்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தப்பகுதியில் காட்டுயானை முகாமிட்டதால் அலுவலகத்தில் இருந்த சில பொருட்கள் சேதமாயின. நேற்று மாலை இந்த யானை கவர்க்கல் எஸ்டேட்டில் 3 வீடுகளின் கதவுகளை சேதப்படுத்தி சென்றது.


