பொள்ளாச்சி : ஆடி பெருக்கு பண்டிகையையொட்டி ஆழியாறு அணைப்பகுதி, மங்கி பால்ஸ் உள்ளிட்ட இடங்களில், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அணைக்கு வந்த பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். வழக்கத்தைவிட ஆழியாறு பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.ஆழியாறு ஆறு, அணைப்பகுதிகளில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆழியாறு பகுதிக்கு நேற்று மதியம் வரை மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.அதேபோல், மங்கி பால்சில் நீர் கொட்டுவதால் பயணிகள் அருவியில் குளிக்க ஆர்வம் காட்டினர். மங்கி பால்சில் பயணிகளின் பாதுகாப்புக்காக, வனத்துறையினர் சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆழியாறுக்கு வந்த பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அணைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பஸ், வேன்களில் குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் வண்ணமீன் காட்சியகம், பூங்கா, அணைப்பகுதிகளை ஆக்கிரமித்திருந்தனர்.


