Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/புண்ணியம் மிகு புரட்டாசி சனிக்கிழமை

புண்ணியம் மிகு புரட்டாசி சனிக்கிழமை

புண்ணியம் மிகு புரட்டாசி சனிக்கிழமை

புண்ணியம் மிகு புரட்டாசி சனிக்கிழமை

செப் 28, 2024


Latest Tamil News
மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன்.

பெருமாளுக்கு உகந்த மாதங்களில் புரட்டாசி க்கும் சிறப்பிடம் உண்டு.


அதிலும் புரட்டாசி சனிக்கிழமை ஏகபிரசித்தம். உலகெங்கும் உள்ள பெருமாள் கோவில்களில் இந்த சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


தில்லி மயூர்விகார் காருண்ய மகா கணபதி கோவிலில் கோவிந்த கடாட்சம் என்ற வைபவம் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.ஏழுமலையை குறிக்கும் வகையாக ஏழு நிலைகளில் திருப்பதி பத்மாவதி சமேத வேங்கடவனை படிப்படியாக அலங்காரம் செய்து வழிபாடு செய்வது காணவேண்டிய காட்சி.


நினைவில் ஸ்ரீ நிவாச கோவிந்தா என கோஷமிட்டு பக்தர்கள் ஏழுமலையானை வலம் வருவார்கள். திருப்பதி சென்று வந்த மகிழ்ச்சி அவர்கள் உள்ளத்தில் . இந்த வழிபாடு இங்கு மட்டுமே இந்த முறையில் நடைபெறுகிறது. பூஜை முடிவில் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் நடைபெறுகிறது.வழக்கம் போல் மாலையில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெறுகிறது.


புரட்டாசி சனிக்கிழமை விரதம் பற்றி தெரிந்து கொள்வோமா..


பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.


சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க ஒரு கதை சொல்வார்கள்.


பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.


சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.


எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.


- நமது செய்தியாளர் மீனா வெங்கி






      Our Apps Available On




      Dinamalar

      Follow us