Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/பிரதிஷ்டா தின இசை கச்சேரி

பிரதிஷ்டா தின இசை கச்சேரி

பிரதிஷ்டா தின இசை கச்சேரி

பிரதிஷ்டா தின இசை கச்சேரி

மார் 23, 2024


Latest Tamil News
தில்லி மயூர்விகார் சுபசித்தி விநாயகர் கோவிலில் பிரதிஷ்டாதினத்தை ஒட்டி காலையில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் ஹோமங்கள் நடைபெற்றது.மாலையில் ஷண்முகாநந்த சங்கீத சபா சார்பில் சென்னை கிருதி விட்டலின் கர்நாடக இசைக்கச்சேரி நடைபெற்றது.சபாவின் தலைவர் வைத்தியநாதன் ( வழக்கறிஞர், உச்சநீதிமன்றம்) வரவேற்புரையுடன் தொடங்கியது

குரு தட்சிணாமூர்த்தியின் பாதம் வணங்கி விறுவிறுப்பாக ஆபோகி வர்ணம் ' எவரிபோவை பாடிக்கொண்டு துளசி தாசரின் முதல் கிருதியான' காயியே கணபதி ஜகவந்தன ' என்று மூலாதாரனை, மங்கள நாயகனை,மோதகப்பிரியனை சுபசித்தி விநாயகர் கோவிலின் முக்கிய நாயகனை போற்றி வணங்கி தொடர்ந்து விவாதி ராகம் வனஸ்மதியை விஸ்தாரமாய் ராக ஆலாபனையில் அவையோரின் ஆர்வத்தை தூண்டிவிட்டு அந்த ராமனை தியாகராசர் எப்படி கேள்வி கேட்டாரோ அதை நம்மை ரசிக்க வைத்தார்.



உன்னை பயத்திலும் அச்சத்திலும் கஷ்டத்திலும் சரண் அடைந்தேன்.. எப்படி திரெளபதி விபீஷணன் மற்றும் பிரகலாதன் உன்னை வேண்டி நின்றாரோ அப்படி என்ற உதாரணங்கள் காட்டி நம்மையும் அவன் தாள் சரணடையவைத்து 'பரியாசகமா 'வில் ஸ்வரம் பாடி அழகு படுத்தி தொடர்ந்த வயலின் மிருதங்கத்துடன் இதம் கூட்டி ரசிக்க வைத்தது அருமை.அடுத்து நாம் அடிக்கடி கேட்டுப் பழகிய 'பண்டுரீதி கோலு விய வைய்யராதாவை எடுத்து க் கொண்டார். ராமநாமம் என்ற மந்திரத்தை ஹம்சநாதமாய் ஜபித்து கொண்டு அந்த ராம சாம்ராஜ்யத்தில் அவனது சமூகத்தில் நம்மை ஒரு சேவகனாய் தொண்டு செய்யும் பாக்கியத்தை பலவாறாக இறைஞ்சி கேட்டுக்கொண்டு நாம் கடைத்தேற ஒரே தாரக மந்திரம் அதுவே என்பதை அழுந்த சொல்லி பலநூறு முறை கேட்டு மகிழ்ந்ததை புதிய கோணத்தில் ரசிக்க வைத்து தனது சங்கீத ஆழத்தை நம்மை உணரவைத்தார்..

மீண்டும் ராமாமிர்தம் ஹிந்தோளத்தில் கேட்க கிடைத்தது.அருணாசல கவிராயரின் ராம நாடகத்தில் இருந்து ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே நன்மை உண்டொருகாலே'. தமிழ் வரிகள்.அவையோர் புரிந்து கொண்டு ரசித்தனர்.அடுத்து ராக ஆலாபனையில் கமாஸை அழைத்து வர ஸ்ரீ தரின் வயலின் ரத்ன கம்பளம் விரித்து வரவேற்க 'ப்ரோசேவராவை 'கேட்க கிடைத்தது ரசிகர்கள் பாக்கியம்.

மைசூர் வாசுதேவாச்சரியரின் அற்புத வரிகளில் அருமையான சரணாகதி கீர்த்தனை.கிருதி விட்டல் தனது வளமான குரலில் ஸ்வரம் நிரவல் என கொண்டு சென்று பல்லவியை மெருகேற்றி ரசிக்க வைத்தார்.அபிஷேக் அவதானி தனிஆவர்த்தனத்தில் தனது மென்மையான வாசிப்பில் கீர்த்தனை க்கு மலர் கிரீடம் சூட்டி அழகு பார்க்கவைத்தார்

பிரகார நாயகனை, குமரனை, கோலவிழி அழகனை ,கந்தனை, குகனை, கதிர் வேலனை உமையவள் மைந்தனை கூவி அழைத்து எந்தாயும் தந்தையும் நீயேவை தோடியில் தொழுது ..குமரா கேமராவை வராளியில் வலம் வந்து கண்ட நாள் முதலாய் காதல் பெருக அவன் மீது நேசமும் பாசமும் பெருகிட மது வந்தியில் N.S சிதம்பரம் வரிகளில் அருமையாக ரசிக்க வைத்தார்.

அடுத்து யசோதையின் பிரிய பாலனின் பராக்கிரமங்களை தாசகிருதி ' ஜகதோதாரணவில் 'பாடியது நெஞ்சில் பதிந்தது. அதே கண்ணனை பாரதி எப்படி பார்த்தார்.பார்க்கும் இடமெங்கும் நந்த லாலா. அப்படிப்பட்ட பார்வை நமக்குள் வரவேண்டும். அந்த உன்னத நிலைக்கு நம்மை உயர்த்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதை உணரச்செய்து இறுதியாக லால்குடி யின் தில்லானா வுடன் இசை மாலையை அரங்கம் நிறை கரகோஷத்துடன் நிறைவு செய்தார்.

கிருதி விட்டலின் கச்சேரிக்கு தில்லி ஆர் ஸ்ரீ தன் வயலின், அபிஷேக் அவதானி மிருதங்கம் வாசித்தார்கள். கோவில் சார்பிலும் ,.ஷண்முகா நந்த சங்கீத சபா சார்பிலும் கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.நிகழ்வுகளை ஸ்வப்னா ஆனந்த் அழகாக தொகுத்து வழங்கினார். சபா சார்பில் செயலர் கிருஷ்ணசாமி நன்றியுரை வழங்கினார்.கோவில் சார்பில் இசை பிரியர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்து இருந்தனர்.

- நமது செய்தியாளர் மீனா வெங்கி








      Our Apps Available On




      Dinamalar

      Follow us