Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/சரோஜினி நகர் சித்தி புத்தி சமேத ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 36வது மகா ருத்ரம்

சரோஜினி நகர் சித்தி புத்தி சமேத ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 36வது மகா ருத்ரம்

சரோஜினி நகர் சித்தி புத்தி சமேத ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 36வது மகா ருத்ரம்

சரோஜினி நகர் சித்தி புத்தி சமேத ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 36வது மகா ருத்ரம்

நவ 10, 2024


Latest Tamil News
புதுதில்லி : சரோஜினி நகர் சித்தி புத்தி சமேத ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில், நவம்பர் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை 36வது மகாருத்ரம், ஶ்ரீனிவாச சாஸ்திரிகள் தலைமையில், மிகவும் சிறப்பான முறையில் நடந்தேறியது. 7ம் தேதி மாலை உதக சாந்தியுடன் துவங்கி,

10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் ருத்ர ஹோமம், வசோதரா ஹோமம் மற்றும் பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. எழுபதிற்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் மற்றும் ரித்விக்குகள் இதில் பங்கேற்று ருத்ர ஜபம் பாராயணம் செய்தனர்.


நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கற்பக விநாயகரை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


மகா ருத்ரம்

சிவபெருமானுக்கு சிவம், சிவன், ஈஸ்வரன், மகேஸ்வரன், ருத்ரன் என்று பல நாமங்கள். சிவபெருமானால், அழிக்கும் தொழில் செய்ய உருவாக்கப்பட்டவர் ருத்ரன் என்று சொல்வதுண்டு. ருத்ரன் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்குபவர் என்று பொருள். படைக்கும் கடவுளான பிரம்மாவின் மகன் ருத்ரன் என்கிறது வாயுபுராணம்.


ருத்ரம் யஜூர் வேதத்தில் ஒரு அங்கம். பஞ்சாட்சர மந்திரம் என்று சொல்லப்படுகிற “சிவாயநம” என்பது ருத்ரத்தின் இதயப் பகுதி என்பதால், ருத்ரம் தினசரி பூஜை, ஜெபம், ஹோமம் ஆகியவற்றில் பாராயணம் செய்யப்படுகிறது. திரயோதசி திதியன்று செய்யும் பிரதோஷ பூஜைகளில் ருத்ரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுவித்து முக்திக்கு வழி செய்யும் காரணத்தால், ருத்ரம், “ருத்ரோபநிடதம்” என்று சொல்லப்படுகிறது. நூற்றுக் கணக்கான நாமங்களால் ருத்ரனை பூஜிப்பதால், இதனை “சதருத்ரீயம்” என்றும் சொல்வார்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறவும், அனைத்துப் பாவங்களிற்கும் பிராயச்சித்தமாகவும் ருத்ரம் ஜெபிப்பது பலன் தரும்.


ருத்ரத்தின் அங்கமான “நமகம்” ருத்ரனின் பல்வேறு அடைமொழிகளையும், பெயர்களையும் பட்டியலிடுகிறது. “சமகம்” வாழ்வின் அனைத்துத் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற இறைவனை பிரார்த்தனை செய்யும் விதமாக அமைந்துள்ளது.


ருத்ரம் ஜெபித்துப் பின் சமகம் ஜெபிப்பது “லகு ருத்ரம்” எனப்படும். ருத்ரத்தின் பதினோரு அனுவாகம் (பகுதிகள்) ஜெபித்துப் பின் சமகத்தின் முதல் அனுவாகம், மறுபடியும் ருத்ரம் முடித்து, சமகத்தின் இரண்டாவது அனுவாகம் என்று பதினோராவது முறை ருத்ரம் முடித்து, சமகத்தின் பதினோராவது அனுவாகம் என்று பாராயணம் செய்வார்கள். இவ்வாறு செய்யும்போது ருத்ரம் 121 முறை பாராயணம் செய்யப்படுகிறது. இவ்வாறு பதினோறு முறை ஜெபிப்பது “மகா ருத்ரம்”. இவ்வாறு செய்வதில் ருத்ரம் 1331 முறைகள் பாராயணம் செய்யப்படுகின்றன. பதினோரு மகாருத்ரம், “அதிருத்ரம்” எனப்படும்.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us