'உலகை' வெல்லுமா இந்தியா... தென் ஆப்ரிக்காவுடன் இன்று பைனல்
'உலகை' வெல்லுமா இந்தியா... தென் ஆப்ரிக்காவுடன் இன்று பைனல்
'உலகை' வெல்லுமா இந்தியா... தென் ஆப்ரிக்காவுடன் இன்று பைனல்
ADDED : ஜூன் 29, 2024 06:37 AM

பிரிட்ஜ்டவுன்: 'டி-20' உலக கோப்பை பைனலில் இன்று(ஜூன் 29) இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதுகின்றன. இதில், இந்திய அணி அசத்தும் பட்சத்தில் இரண்டாவது முறையாக கோப்பை கைப்பற்றலாம்.
வெஸ்ட் இண்டீசில் 9வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட முன்னணி அணிகள் வெளியேறின. இன்று பார்படாசின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோகித் தலைமை
இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. கடந்த 12 மாதங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023), 50 ஓவர் உலக கோப்பை (2023), தற்போது 'டி-20' உலக கோப்பை என மூன்று 'உலக' பைனலில் அணியை வழிநடத்தும் முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை பெறுகிறார் ரோகித் சர்மா. 7 போட்டிகளில் 248 ரன் குவித்துள்ள இவர், நல்ல துவக்கம் தர வேண்டும்.
அனுபவ கோலி (7 போட்டி, 75 ரன்) தடுமாறுகிறார். இன்று விளாசினால் நல்லது. ரிஷாப் பன்ட் அவசரப்படக்கூடாது. சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா என பேட்டிங் படை வலுவாக உள்ளது.
'வேகத்தில்' பும்ரா (13 விக்கெட்), அர்ஷ்தீப் (15) மிரட்டுகின்றனர். பாண்ட்யா ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். 'சுழலில்' அக்சர், குல்தீப், ஜடேஜா கைகொடுக்கின்றனர்.
'வேகம்' பலம்
தென் ஆப்ரிக்காவும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. ஐ.சி.சி., 'நாக்-அவுட்' போட்டிகளில் சொதப்புவதால், 'சோக்கர்ஸ்' என கேலி செய்தனர். இம்முறை அபாரமாக செயல்பட்டு, விமர்சனங்களை தகர்த்தது.
குயின்டன், ஹென்ட்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், கிளாசன், மில்லர், ஸ்டப்ஸ் என சிறந்த பேட்டர்கள் உள்ளனர். 'வேகத்தில்' ரபாடா, யான்சென், நோர்க்யா மிரட்டலாம். மஹாராஜ், ஷம்சி 'சுழலை' இந்திய வீரர்கள் எளிதில் சமாளிப்பது உறுதி.