நேபாள இடைக்கால பிரதமர் யார்? கோஷ்டி மோதலால் இழுபறி
நேபாள இடைக்கால பிரதமர் யார்? கோஷ்டி மோதலால் இழுபறி
நேபாள இடைக்கால பிரதமர் யார்? கோஷ்டி மோதலால் இழுபறி
ADDED : செப் 12, 2025 02:14 AM

காத்மாண்டு:நேபாளத்தில் இடைக்கால பிரதமராக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்களின் பிரதிநிதிகள் ராணுவ அதிகாரிகளுடன் நடத்திய பேச்சில் அவர்களுக்குள் ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால், இழுபறி நீடிக்கிறது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்த அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கியது.
அவ்விதிகளுக்கு 'வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யு டியூப், எக்ஸ்' உட்பட, 26 பிரபல சமூக ஊடகங்கள் இணங்கவில்லை. இதனால் ஒரே நாளில் அவற்றை முடக்கி நேபாள அரசு சமீபத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்தது.
ஆட்சி கவிழ்ந்தது தாங்கள் தினமும் பயன்படுத்தும் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டதால் ஏராளமான இளைஞர்கள் கடந்த 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இது வன்முறையில் முடிந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியாகினர்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் 9ம் தேதி காத்மாண்டுவில் உள்ள பார்லிமென்ட், சிங்க தர்பார் எனும் தலைமை செயலகம், உச்ச நீதிமன்றம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களின் இல்லம் ஆகியவற்றை சூறையாடினர்.
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவியில் இருந்து விலகினார். அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர். அதன் பின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பித்து கலவரத்தை ஒடுக்கியது.
இரண்டு நாள் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்ததால், அடுத்து தேர்தல் நடக்கும் வரை அரசை வழிநடத்த இடைக்கால பிரதமரை தேடும் பணி நடந்து வருகிறது.
காத்மாண்டு மேயர் பாலென் ஷா, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி குல்மான் கிஷிங் ஆகியோரை போராட்டக் குழுவினர் பரிந்துரைத்தனர்.
இதில், பாலென் ஷா வெளிப்படையாக தனக்கு விருப்பமில்லை என தெரிவித்து விட்டார்.
அடுத்த தேர்வாக சுசீலா கார்கி உள்ளார். பாலென் ஷா சுசீலா கார்கிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வயது 73. இதனால் இளைஞர்களில் ஒரு பிரிவினர் அவரை ஏற்க தயாராக இல்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராணுவ தலைமையகம் வெளியே இளைஞர்கள் இரு பிரிவாக பிரிந்து ஒரு தரப்பினர் சுசீலா கார்கிக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் குல்மான் கிஷிங்கை ஆதரித்தும் நேற்று காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தீர்வு குல்மான் கிஷிங், நேபாளத்தின் மின்வெட்டு பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தது, ஊழல் இல்லாத நிர்வாகம் ஆகியவற்றுக்காக பிரபலமாக அறியப்படுகிறார். மேலும், இவர் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு உடையவர்.
இடைக்கால பிரதமர் தேர்வு தொடர்பாக ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'நாங்கள் பல்வேறு பிரதிநிதிகளுடன் பல சுற்று பேச்சுக்களை நடத்தி வருகிறோம்.
'இந்தப் பேச்சுக்கள் தற்போதைய இழுபறியைத் தீர்க்கும். நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்கு வழி வகுக்கும்' என, கூறப்பட்டு உள்ளது.
ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ள நேபாள அதிபர் ராமசந்திர பவுடேல், “அனைத்து தரப்பினரும் ஒத்துழைத்து மக்களின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.