உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால் உயிருடன் இருப்பர்: ரஷ்ய அதிபர்
உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால் உயிருடன் இருப்பர்: ரஷ்ய அதிபர்
உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால் உயிருடன் இருப்பர்: ரஷ்ய அதிபர்
ADDED : மார் 16, 2025 12:32 AM

மாஸ்கோ: “எங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால், அவர்களை உயிருடன் விடுவோம்,” என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ஆதரவு
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வரும் சூழலில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதுடன், ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு நடத்தி, போரை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, ரஷ்யா வின் குர்ஸ்க் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, 1,000க்கும் மேற்பட்ட உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, ரஷ்ய படையினர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்ததுடன், கடும் சித்ரவதை செய்வதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், 'இரண்டாம் உலகப்போருக்குப் பின் இத்தகைய கொடூர செயலை இந்த உலகம் பார்க்கவில்லை. எனவே, உக்ரைன் வீரர்களை உயிருடன் விடுவிக்கும்படி ரஷ்ய அதிபர் புடினை கேட்டுக்கொள்கிறேன்' என, குறிப்பிட்டுஇருந்தார்.
மரியாதை
இதற்கு பதில் அளித்து, ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், “ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய உக்ரைன் வீரர்களை, எங்கள் படையினர் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.
''அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை மனிதாபிமான முறையில் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம். ஆனால், அவர்கள், தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால் அனைவரும் உயிருடன் இருப்பர்; சர்வதேச சட்டத்தின்படி மரியாதையுடனும் நடத்தப்படுவர்,” என்றார்.
ஆனால், 'எங்கள் நாட்டு வீரர்கள் யாரும் ரஷ்ய படையால் சுற்றி வளைக்கப்படவில்லை' என, உக்ரைன் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.