ஈரானில் இரட்டை குண்டுவெடிப்பு 103 பேர் பலி; 200 பேர் காயம்
ஈரானில் இரட்டை குண்டுவெடிப்பு 103 பேர் பலி; 200 பேர் காயம்
ஈரானில் இரட்டை குண்டுவெடிப்பு 103 பேர் பலி; 200 பேர் காயம்
ADDED : ஜன 04, 2024 01:35 AM

டெஹ்ரான், ஈரானில் மறைந்த ராணுவ தளபதியின் நினைவாக நடந்த நிகழ்ச்சியின்போது இரண்டு குண்டுகள் வெடித்ததில், 103 பேர் பலியாயினர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேற்காசிய நாடான ஈரானில், அதிபர் இப்ராஹிம் ராய்சி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. ஷியா முஸ்லிம்கள் அதிகளவில் உள்ள இங்கு, மதத் தலைவர்களே முக்கிய முடிவுகளை எடுப்பர்.
இதன்படி, 1989ல் இருந்து சையது அலி ஹோசைனி காமெனி, 84, நாட்டின் தலைவராக இருந்து வருகிறார்.
மோதல்
கடந்த 1979ல் இஸ்லாமிய புரட்சி வெடித்ததில் இருந்து ஈரானில் இருந்து வெளியேறிய பல பயங்கரவாத அமைப்புகள், தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கிடையே, ஈரான் - ஈராக் இடையேயான போரும் நடந்தது.
பிரிவினைவாத அமைப்புகள், சன்னி முஸ்லிம் அமைப்புகள், ஈரான் மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதைத் தவிர உள்நாட்டு போரும் நடந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து, 2018ல் அமெரிக்கா விலகியது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
கடந்த 2020ல் அமெரிக்கா, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறு விமானம் வாயிலாக நடத்திய தாக்குதலில், ஈரானின் முக்கிய படைத் தளபதியான ஜெனரல் குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
ஈரானின் புரட்சிகர படையான, கத்ஸ் படையின் தலைவராக இருந்த ஜெனரல் குவாசிம் சுலைமானி, அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பழிவாங்கும் வகையிலேயே அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சுலைமானியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கெர்மான் பகுதியில், 1,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர்.
அலறியடித்து ஓட்டம்
அப்போது கூட்டத்துக்குள் ஒரு குண்டு வெடித்தது. 15 நிமிடங்களுக்குப் பின், மற்றொரு குண்டும் வெடித்தது. இதையடுத்து, மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
குண்டு வெடிப்பு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி, 103 பேர் உயிரிழந்துள்ளனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஈரான் ஆதரவு தெரிவித்து உள்ளது.
இதைத் தவிர லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா, யேமனின் ஹவுதி பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால், இவற்றுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இவை பயங்கரவாத தாக்குதல் என, ஈரான் அரசு கூறியுள்ளது.