உடனடியாக பதவி விலகி சென்று விடுங்கள் அமெரிக்க வங்கி தலைவரிடம் டிரம்ப் காட்டம்
உடனடியாக பதவி விலகி சென்று விடுங்கள் அமெரிக்க வங்கி தலைவரிடம் டிரம்ப் காட்டம்
உடனடியாக பதவி விலகி சென்று விடுங்கள் அமெரிக்க வங்கி தலைவரிடம் டிரம்ப் காட்டம்
ADDED : ஜூலை 04, 2025 09:04 AM

வாஷிங்டன்: அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு, ஜெரோம் பவலை அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க வீட்டு வசதி நிதி கண்காணிப்பு ஏஜென்சியின் இயக்குனரான பில் புல்டி, சமூக வலைத்தளத்தில், பவலை விமர்சித்து பதிவிட்டார். வாஷிங்டனில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்தை புதுப்பித்ததில் முறைகேடு நடந்ததாகவும், அதுகுறித்து பவலிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டார்.
அரசியலில் ஒருசார்பாக பவல் நடந்து கொண்டது குறித்தும் விசாரிக்க வேண்டுமென அவர் கூறினார். அதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில், தன் சமூகவலைதளத்தில் அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
அதில், 'மிகத் தாமதமானது' எனக் கூறிய அவர், 'கடன் வட்டிக் குறைப்பிலும் வேகம் காட்டாத ஜெரோம் பவல், உடனடியாக பதவி விலக வேண்டும்' என, தெரிவித்துள்ளார். பவல் பதவி விலகியதும், பெடரல் ரிசர்வ் வங்கி தலைவர் பதவிக்கு சில நபர்களை மனதில் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
தற்போது 4.25 சதவீதத்தில் இருந்து 4.50 சதவீதமாக உள்ள கடன் வட்டியை குறைக்குமாறு, பெடரல் ரிசர்வுக்கு, சில நாட்கள் முன்தான் அதிபர் டிரம்ப் கடிதம் அனுப்பினார். இந்நிலையில், பவலை ராஜினாமா செய்ய அவர் வலியுறுத்தியுள்ளார்.
விரைவாக கடன் வட்டியை குறைக்க மறுப்பதாக, பவல் மீது, கடந்த ஜனவரியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். பவலின் செயல்பாடுகளால் பொருளாதார வளர்ச்சி பாதிப்பதாகவும், பணவீக்கம் உயரும் என்ற பவலின் கணிப்பு தவறானது என்றும் கூறி வருகிறார் டிரம்ப்.