டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி திட்டம்: அமெரிக்கா "பகீர்" குற்றச்சாட்டு
டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி திட்டம்: அமெரிக்கா "பகீர்" குற்றச்சாட்டு
டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி திட்டம்: அமெரிக்கா "பகீர்" குற்றச்சாட்டு
UPDATED : ஜூலை 17, 2024 12:54 PM
ADDED : ஜூலை 17, 2024 10:59 AM

வாஷிங்டன்: 'அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய ஈரான் சதி திட்டம் தீட்டியுள்ளது' என அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதனால், டிரம்பிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். சில தினங்களுக்கு முன்பு, பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் ட்ரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காது பகுதியில் காயம் ஏற்பட்டது.
கொல்ல சதி
இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய ஈரான் சதி திட்டம் தீட்டியுள்ளது என அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது. இதற்கு அப்போது அதிபராக இருந்த டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.
இதனால் டிரம்பை கொல்ல ஈரான் சதி செய்து வருகிறது. அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனால் டிரம்பிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்
இது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறியதாவது: டிரம்பிற்கு எதிராக ஈரான் செய்து வரும் அச்சுறுத்தல்களை பல ஆண்டுகளாக கண்காணித்து வருகிறோம். காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் ஈரானின் முயற்சிகளால் அச்சுறுத்தல்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ஈரான் மறுப்பு
டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.