Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/'பருவநிலை மாறுபாடு பிரச்னையில் நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை'

'பருவநிலை மாறுபாடு பிரச்னையில் நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை'

'பருவநிலை மாறுபாடு பிரச்னையில் நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை'

'பருவநிலை மாறுபாடு பிரச்னையில் நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை'

ADDED : செப் 03, 2025 06:20 AM


Google News
Latest Tamil News
பிரேசிலா : உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லாததால், பருவநிலை மாறுபாடு பிரச்னையில் செயல்படுவதில் தாமதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என, பருவநிலை மாறுபாடு மாநாட்டுக்கான தலைவர் ஆண்ட்ரே கோரியா டோ லாகோ எச்சரித்துள்ளார்.

பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, 2015ல் பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் உலக நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ளன.

பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு நாடும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்க மாநாடுகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, சி.ஓ.பி., - 3-0 எனப்படும் 30வது மாநாடு, தென் அமெரிக்க நாடான பிரேசிலின் பெலேம் நகரில், வரும் நவம்பரில் நடக்க உள்ளது. பருவநிலை மாறுபாடு மாநாடு, அமேசான் பிராந்தியத்தில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

பாரிஸ் ஒப்பந்தத்திற்கு பின் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பிடவும், பருவநிலை மாறுபாடு பிரச்னையை எதிர்த்து போராட எடுக்க வேண்டிய வலுவான நடவடிக்கைகள் குறித்து, 200 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டுக்கு முன்பாக, ஒவ்வொரு நாடும், தங்களுடைய நிர்ணயிக்கப்பட்ட இலக்கு அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், 29 நாடுகள் மட்டுமே இதுவரை தாக்கல் செய்துள்ளன.

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். தன் முந்தைய பதவி காலத்திலும் இவ்வாறு ஒப்பந்தத்தில் இருந்து அவர் வெளியேறினார்.

இந்நிலையில் சி.ஓ.பி., - 30 மாநாட்டு தலைவரான, பிரேசிலின் வெளியுறவுத் துறையின் பருவநிலை மாறுபாடு செயலர் லாகோ கூறியுள்ளதாவது:

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல் மற்றும் நிதி பிரச்னையை நீக்க வேண்டியது அவசியமாகும். வளரும் நாடுகள் தங்கள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினாலும், அவர்களுக்கு தேவையான நிதியுதவி கிடைப்பதில்லை. இது காலநிலை பேச்சுகளில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது.

பருவநிலை பிரச்னைக்கு முக்கிய காரணம் காற்று மாசு. இதைக் குறைப்பதற்காக, பிரேசில் மற்றும் இந்தியாவில் நேர்மையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தற்போது நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு இல்லாததால், பருவநிலை பிரச்னைக்கான தீர்வுகளை எட்டுவதற்கான கால அவகாசத்தை நாம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us