பதவி நீக்கத்தை ரத்து செய்தது நீதிமன்றம்
பதவி நீக்கத்தை ரத்து செய்தது நீதிமன்றம்
பதவி நீக்கத்தை ரத்து செய்தது நீதிமன்றம்
ADDED : மார் 25, 2025 06:10 AM

சியோல் : தென் கொரியாவில், இடைக்கால அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஹான் டக் சூவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தை, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, இடைக்கால அதிபராக அவர் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த யூன் சுக் இயோல், 64, அதிபராக இருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், ராணுவ சட்டத்தை அவர் அமல்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சில மணி நேரங்களிலேயே, அந்த சட்டத்தை அவர் திரும்ப பெற்றார்.
இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள், பார்லி.,யில் கூடி, அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானத்தை நிறைவேற்றினர். தொடர்ந்து, அதிபர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதையடுத்து, இடைக்கால அதிபராக, பிரதமர் ஹான் டக் சூ, 75, நியமிக்கப்பட்டார். தென் கொரிய சட்டப்படி, அதிபரின் பதவி நீக்கத்தை உறுதி செய்ய அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவை. ஒன்பது நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றத்தில், குறைந்தது ஆறு பேரின் ஆதரவு தேவை.
யூன் சுக் இயோலின் பதவி நீக்கத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, இடைக்கால அதிபராக ஹான் டக் சூ பதவியேற்ற இரு வாரங்களிலேயே, அவருக்கு எதிராக, பார்லி.,யில் பதவி நீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு ஆதரவாக பெரும்பான்மை எம்.பி.,க்கள் ஓட்டளித்ததை அடுத்து, இடைக்கால அதிபர் பதவியில் இருந்து ஹான் டக் சூ நீக்கப்பட்டார்.
தென் கொரிய வரலாற்றிலேயே, அதிபர் பதவியில் இருந்து இருவர் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறை.
இதை தொடர்ந்து, துணை பிரதமரும், நிதியமைச்சருமான சோய் சாங்- மோக், இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இடைக்கால அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஹான் டக் சூவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தை, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் நேற்று அதிரடியாக ரத்து செய்தது.
'ஹான் டக் சூவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சட்டத்திற்கு எதிரானவை அல்ல; பதவியில் இருந்து நீக்கும் அளவுக்கு தீவிரமானவை அல்ல' என, நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, இடைக்கால அதிபராக ஹான் டக் சூ மீண்டும் நியமிக்கப்பட்டார். எனினும், அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட யூன் சுக் இயோலுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது, அரசியலமைப்பு நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்கவில்லை.