Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/சுப்மன் கில், ஜெய்ஸ்வால் அபாரம்: முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம்

சுப்மன் கில், ஜெய்ஸ்வால் அபாரம்: முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம்

சுப்மன் கில், ஜெய்ஸ்வால் அபாரம்: முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம்

சுப்மன் கில், ஜெய்ஸ்வால் அபாரம்: முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம்

ADDED : ஜூலை 03, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
பர்மிங்ஹாம்: இரண்டாவது டெஸ்டில் இந்திய கேப்டன் சுப்மன் கில் சதம் கடந்து கைகொடுத்தார். ஜெய்ஸ்வால் தன் பங்குக்கு அரைசதம் விளாசினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன்-சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது.

பும்ரா 'ரெஸ்ட்'


இங்கிலாந்து 'லெவன்' அணியில் மாற்றமில்லை. இந்திய 'லெவன்' அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டது. வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் தேர்வானார். தமிழகத்தின் சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு 'ஆல்-ரவுண்டர்'களான நிதிஷ் குமார் ரெட்டி, தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்தனர். 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

ஜெய்ஸ்வால் அபாரம்:


இந்திய அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் ஜோடி துவக்கம் தந்தது. கிறிஸ் வோக்ஸ் 'வேகத்தில்' ராகுல் (2) போல்டானார். ஜோஷ் டங் வீசிய 12வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்தார் கருண் நாயர். டங் வீசிய 22வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டிய ஜெய்ஸ்வால், 59 பந்தில் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த போது பிரைடன் கார்ஸ் 'வேகத்தில்' கருண் (31) வெளியேறினார்.

கில் கலக்கல்:


பின் இணைந்த கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஜோடி நிதானமாக விளையாடியது. வோக்ஸ் வீசிய 32வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் கில். மூன்றாவது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்த போது ஸ்டோக்ஸ் 'வேகத்தில்' ஜெய்ஸ்வால் (87) 'பெவிலியன்' திரும்பினார். பஷிர் 'சுழலில்' பன்ட் (25) சிக்கினார். வோக்ஸ் 'வேகத்தில்' நிதிஷ் குமார் ரெட்டி (1) போல்டானார். ஜோ ரூட் பந்தில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டிய சுப்மன் கில், டெஸ்ட் அரங்கில் தனது 7வது சதத்தை பதிவு செய்தார்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 310 ரன் எடுத்திருந்தது. சுப்மன் கில் (114), ஜடேஜா (41) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் வோக்ஸ் 2, பஷிர், கார்ஸ், ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

லார்ட்சில் பும்ரா


பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டிக்கான இந்திய 'லெவன்' அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பெறவில்லை. இதுகுறித்து இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், ''பேட்டிங்கை பலப்படுத்த குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படவில்லை.
பணிச்சுமையை குறைக்க இப்போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. லார்ட்சில் நடக்கவுள்ள 3வது டெஸ்டில் நிச்சயம் பங்கேற்பார்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us