Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ அமெரிக்காவில் கடும் இயற்கை சீற்றம் சூறாவளி, காட்டு தீயில் சிக்கி 32 பேர் பலி

அமெரிக்காவில் கடும் இயற்கை சீற்றம் சூறாவளி, காட்டு தீயில் சிக்கி 32 பேர் பலி

அமெரிக்காவில் கடும் இயற்கை சீற்றம் சூறாவளி, காட்டு தீயில் சிக்கி 32 பேர் பலி

அமெரிக்காவில் கடும் இயற்கை சீற்றம் சூறாவளி, காட்டு தீயில் சிக்கி 32 பேர் பலி

ADDED : மார் 17, 2025 09:47 AM


Google News
Latest Tamil News
பியெட்மோன்ட் : அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கடுமையான சூறாவளி, காட்டுத் தீ என, அடுத்தடுத்து தொடர்ந்த இயற்கை சீற்றங்களில் சிக்கி, 32 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மிக்சிகன், மிசோரி மாகாணங்களில், கடந்த 17ம் தேதி இரவு, சூறாவளி வீசத் துவங்கியது. இது, சிறிது சிறிதாக நகர்ந்து, நேற்று முன்தினமும், நேற்றும் மிசிசிபி, ஜார்ஜியா, டெக்சாஸ் என வரிசையாக அடுத்தடுத்த மாகாணங்களை துவம்சம் செய்தது. அதன் தொடர்ச்சியாக, ஒக்லகோமா மாகாணத்தில் காட்டுத் தீ பரவியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

மணிக்கு 70 கி.மீ., வேகம் வரை வீசிய சூறாவளியால், வயனே கவுன்டி, பட்லர் கவுன்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. பள்ளி கட்டடங்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்தன. லாரிகள் போன்ற கனரக வாகனங்களைக் கூட சூறாவளி புரட்டிப் போட்டது. இடிபாடுகளில் சிக்கி வயனே கவுன்டியில் மட்டும், 15 பேர் உயிரிழந்தனர்.

சூறாவளியைத் தொடர்ந்து, புழுதி காற்றும் பலமாக வீசியதால், சாலைகளில் வாகனங்களை இயக்க முடியவில்லை. கன்சாஸ் நகர சாலையில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின. மிசிசிபியில் 10 பேர் பலியாகினர்.

சூறாவளி, புழுதிப்புயலைத் தொடர்ந்து ஓக்லகோமா மாகாணத்தில் பயங்கரமாக காட்டுத் தீ பரவியது. மாகாணம் முழுதும், 130 இடங்களில் தீப்பிடித்ததில், 689 சதுர கி.மீ., நிலங்கள் தீக்கிரையாகின.

இதற்கிடையே, மினசோட்டா, டகோட்டா ஆகிய இடங்களில் நேற்று பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அரை அடி அளவுக்கு பனிகட்டி குவியும் என்றும், சூறாவளியும் சேருவதால் வீடுகள் சேதமைடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. 'மார்ச் மாதத்தில் இதுபோன்ற அடுத்தடுத்த இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது, இதுவரை காணாத நிகழ்வு' என வானிலை வல்லுநர்கள் கூறினர்.

இயற்கையின் கோரத் தாண்டவத்தால், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில், 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 32 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சூறாவளி வலுவிழக்காமல் லுசியானா, மிசிசிபி, அலபாமா, ஜார்ஜியா, புளோரிடா மாகாணங்களை கடப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் சேதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us