Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாவதில் தாமதம்

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாவதில் தாமதம்

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாவதில் தாமதம்

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாவதில் தாமதம்

ADDED : மார் 21, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
கீவ்: அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறார். இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடனும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்.

'அடுத்த 30 நாட்களுக்கு முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும்' என டிரம்ப் வலியுறுத்திய நிலையில், அதை புடின் மறுத்ததால் பேச்சில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இருப்பினும், இரு தினங்களுக்கு முன் புடினுடன், டிரம்ப் நடத்திய பேச்சின் போது, 'அடுத்த 30 நாட்களுக்கு முக்கிய எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது' என ரஷ்யா - உக்ரைன் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், இது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படாததால், ஒப்பந்தத்தை அமலாக்குவதில் தாமதம் நிலவுகிறது.

பேச்சின் போது, அமெரிக்க தரப்பில் எரிசக்தி நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என எடுத்துரைக்கப்பட்டது. ரஷ்ய தரப்பிலோ, எரிசக்தி நிறுவனங்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்படாது என கூறப்பட்டது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியோ, எரிசக்தி நிறுவனங்களுடன் ரயில் மற்றும் துறைமுக கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதேசமயம், எரிசக்தி நிறுவனங்களின் உரிமையை அமெரிக்காவுக்கு தருவது வாயிலாக, அவை பாதுகாக்கப்படும் என்றும் வெள்ளை மாளிகை கூறியது.

இந்த சூழலில், டிரம்புடன், அதிபர் புடின் பேச்சு நடத்திய மறுநாளே, உக்ரைனின் முக்கிய இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கியதாக ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

''கெய்வ், சைட்டோமிர் உள்ளிட்ட பகுதிகளில் பறந்த ரஷ்ய ட்ரோன்கள் ரயில் நிலையம், மருத்துவமனை மற்றும் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மீது தாக்குதல் நடத்தின. இதன் வாயிலாக, போரை நீட்டிக்கவே புடின் விரும்புவது தெரிகிறது,'' என, அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், 'போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாமல் இருப்பது குறித்து அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்றுகூடி விரைவில் சவுதி அரேபியாவில் பேச்சு நடத்தப்பட உள்ளனர்' என, வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, போர் நிறுத்த பேச்சின் எதிரொலியாக, போரின் போது சிறைபிடிக்கப்பட்ட 175 உக்ரைன் கைதிகள் மற்றும் பலத்த காயமடைந்த 22 பேரையும் விடுவித்து விட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துஉள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us