இந்தியர்களுக்கு எதிராக ஆஸி.,யில் பேரணி
இந்தியர்களுக்கு எதிராக ஆஸி.,யில் பேரணி
இந்தியர்களுக்கு எதிராக ஆஸி.,யில் பேரணி
ADDED : செப் 01, 2025 12:59 AM

கான்பெரா: ஆஸ்திரேலியாவில், இந்தியர்கள் அதிகளவில் குடியேறுவதாகக் கூறி, 'மார்ச் பார் ஆஸ்திரேலியா' என்ற அமைப்பினர் பல்வேறு நகரங்களில் பேரணி நடத்தினர்.
ஆஸ்திரேலியாவில், பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில், ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியர்கள் குடியேற்றத்துக்கு எதிராக அந்த அமைப்பினர் குரல் கொடுக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று, தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட பல நகரங்களில், 'மார்ச் பார் ஆஸ்திரேலியா' அமைப்பினர் பேரணி நடத்தினர். இதில், தேசியக் கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கான்பெராவில் நடந்த பேரணியில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கானோர், பார்லி.,யை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சிட்னியில் நடந்த பேரணியில், 7,000 பேர் பங்கேற்றனர். அப்போது, குடியேற்றத்துக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பில் குவிக்கப்பட்டனர்.
மெல்போர்னில், பிளிண்டர்ஸ் தெரு நிலையத்திற்கு வெளியே நடந்த பேரணியில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கானோர், மாகாண தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதே போல, ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் குடியேற்றத்துக்கு எதிராக பேரணிகள் நடந்தன. இந்த பேரணிக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலியா அரசு, இது வெறுப்புணர்வை பரப்புவதாகக் குற்றஞ்சாட்டியது.
ஆஸி., மக்கள் தொகை 2.72 கோடியாகும். 10 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் வசிக்கின்றனர்.