'எச்1பி' விசா விதிகளை கண்காணிக்க 'புராஜெக்ட் பயர்வால்' திட்டம் துவக்கம்
'எச்1பி' விசா விதிகளை கண்காணிக்க 'புராஜெக்ட் பயர்வால்' திட்டம் துவக்கம்
'எச்1பி' விசா விதிகளை கண்காணிக்க 'புராஜெக்ட் பயர்வால்' திட்டம் துவக்கம்
ADDED : செப் 22, 2025 01:39 AM

வாஷிங்டன்: அமெரிக்காவின் 'எச்1பி' விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்ட அதே நாளில் 'புராஜெக்ட் பயர்வால்' திட்டத்தை துவங்குவதாக அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர் அங்கு தங்கி வேலை செய்வதற்காக, எச்1பி விசா வழங்கப்படுகிறது. கடந்த 1990ம் ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கான கட்டணம் முன்பு 1.5 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த விசாவுக்கான கட்டணத்தை, 88 லட்சம் ரூபாயாக பல மடங்கு அதிகரித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இது நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், எச்1பி விசாவுக்கான கட்டண உயர்வு என்பது, அமெரிக்க பணியாளர்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டதுஎனவும், இந்த விசாவை முறைகேடாக பயன்படுத்தி, அமெரிக்க தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை தடுக்கவே இக்கட்டண உயர்வு எனவும் டிரம்ப் நிர்வாகம்தெரிவித்துள்ளது.
எச்1பி விசாவுக்கான கட்டண உயர்வு குறித்த உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்ட அதே நாளில், அந்நாட்டு தொழிலாளர் நலத்துறையும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது எச்1பி விசா அமலாக்கத்தை கண்காணிக்க 'புராஜெக்ட் பயர்வால்' திட்டத்தை துவங்குவதாக அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
எச்1பி விசா மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
தகுதியான அமெரிக்க பணியார்களுக்கு பணி வழங்க மறுப்பது, நியாயமான சந்தை மதிப்பில் வழங்க வேண்டியதைவிட குறைவான ஊதியத்துக்கு வெளிநாட்டு பணியாளர்களை பணிக்கு அமர்த்துவது, தற்போதுள்ள அமெரிக்க பணியாளர்களை இடமாற்றம் செய்ய அல்லது அவர்களுக்கு பதிலாக எச்1பி பணியாளர்களை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
பிராஜெக்ட் பயர்வால் வாயிலாக, விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களில் நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க, தொழிலாளர் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள் மீறும் நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.
தகுதிவாய்ந்த அமெரிக்கர்களுக்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்வதன் வாயிலாக, மிகவும் திறமையான அமெரிக்க பணியாளர்களின் உரிமைகள், ஊதியங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதே புராஜெக்ட் பயர்வால் திட்டத்தின் நோக்கமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.