அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்த கூடாது: புடினிடம் மோடி கூறியதாக போலந்து பாராட்டு
அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்த கூடாது: புடினிடம் மோடி கூறியதாக போலந்து பாராட்டு
அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்த கூடாது: புடினிடம் மோடி கூறியதாக போலந்து பாராட்டு
ADDED : மார் 18, 2025 07:12 AM

புதுடில்லி: உக்ரைன் போரில் அணு ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது என, ரஷ்ய அதிபர் புடினிடம், பிரதமர் மோடி நேரில் வலியுறுத்தியதாக போலந்து வெளியுறவு அமைச்சர் விளாடிஸ்லாவ் டியோபில் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளான உக்ரைன், ரஷ்யா இடையே, மூன்று ஆண்டுகளைக் கடந்து போர் நடக்கிறது. போரை நிறுத்துவதற்காக, கடந்த ஆண்டு ஜூலையில் மாஸ்கோ சென்று ரஷ்ய அதிபர் புடினை, நம் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து, 2024, ஆக., 23-ல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை மோடி சந்தித்தார். அதற்காக, குண்டு மழைக்கு இடையே, உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் இருந்து 20 மணி நேரம் ரயிலில் பயணம் செய்து, உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார்.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தீவிர முயற்சியால், இரு நாடுகளும் தற்போது, தற்காலிக போர் நிறுத்தத்துக்கு முன்வந்துள்ளன. இந்நிலையில், ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளுக்கும் அண்டை நாடான ஐரோப்பாவைச் சேர்ந்த போலந்தின் வெளியுறவு அமைச்சர் விளாடிஸ்லாவ் டியோபில், ரஷ்ய, உக்ரைன் போரை நிறுத்துவதில் நம் பிரதமர் மோடியின் பங்களிப்பை வெகுவாக பாராட்டினார்.
அவர் அளித்த பேட்டியில், “உக்ரைன் போரில், அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என, ரஷ்ய அதிபர் புடினிடம் நேரில் வலியுறுத்தியவர், பிரதமர் மோடி. அதன் பிறகு, கடும் போர் மேகங்களுக்கு இடையே, போலந்தின் வார்சா நகரில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவுக்கு ரயிலில் அவர் பயணம் செய்ததை நினைத்துப் பார்க்கிறேன்.
உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கானோர், அகதிகளாக போலந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைனில் நிலையான அமைதி திரும்ப வேண்டும் என விரும்புகிறோம். அதற்காக, அமைதிப் படையை அனுப்பவும் தயாராக இருக்கிறோம்,” என்றார்.