வாழ்த்து தெரிவித்த தைவான் அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி: சீனா எதிர்ப்பு
வாழ்த்து தெரிவித்த தைவான் அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி: சீனா எதிர்ப்பு
வாழ்த்து தெரிவித்த தைவான் அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி: சீனா எதிர்ப்பு
ADDED : ஜூன் 06, 2024 05:49 PM

பெய்ஜிங்: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்த தைவான் அதிபர் லாய் சிங் டிக்கு பிரதமர் மோடி நன்றி கூறியிருந்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் தைவான் அதிபர் லாய் சிங் டி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‛‛ தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். வளர்ந்து வரும் தைவான் - இந்தியா கூட்டமைப்பை மேம்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்த இணைந்து செயல்படுவோம்'' எனப் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டதாவது: உங்களின் வாழ்த்து செய்திக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை நோக்கி நாம் பணியாற்ற நெருக்கமான உறவுகளை எதிர்பார்க்கிறேன்''. எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: சீனாவுடன் தூதரக உறவு வைத்துள்ள நாட்டின் தலைவர்கள் தைவான் பிராந்திய அதிகாரிகளுடன் எந்த வகையில் உரையாடுவதற்கும் சீனா எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கும். உலகில் ஒரே சீனா தான் உள்ளது. ஒரே சீன கொள்கை தொடர்பாக, அரசியல் ரீதியில் இந்தியா தனது பங்களிப்பை அளித்துள்ளது. தைவானின் அரசியல் திட்டங்களுக்கு எதிராக இந்தியா விழிப்புடன் இருப்பதுடன், ஒரே சீன கொள்கைக்கு எதிரான செயல்களில் விலகியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.