காஷ்மீர் தாக்குதலுக்கு மூளையாக இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி சுதந்திர உலா
காஷ்மீர் தாக்குதலுக்கு மூளையாக இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி சுதந்திர உலா
காஷ்மீர் தாக்குதலுக்கு மூளையாக இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி சுதந்திர உலா

இஸ்லாமாபாத்: பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சைபுல்லா காலித், பாக்., ராணுவத்தினரின் பாதுகாப்புடன், அங்கு நடந்த பேரணியில் பங்கேற்றார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தி, இந்திய சுற்றுலா பயணியர், 26 பேரை சுட்டுக் கொன்றனர். அந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் முன்னணி கமாண்டர்களில் ஒருவரான சைபுல்லா கசூரி என்ற காலித்தும் ஒருவர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய பேரணியில், சைபுல்லா காலித் மற்றும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் மகனான தல்ஹா சயீத், மாகாண அமைச்சர் மாலிக் அஹமது கான் பங்கேற்றனர்.
பேரணியில் பயங்கரவாதிகள் இருவரும் பங்கேற்ற படங்கள், ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சைபுல்லா காலித், தல்ஹா சயீத்திற்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்தனர்.
'பாகிஸ்தானில் பயங்கரவாதிகளே இல்லை; எந்த பயங்கரவாதிக்கும் பாக்., ராணுவம் பாதுகாப்பு மற்றும் ஆதரவு அளிக்கவில்லை' என கூறி வரும் அந்நாட்டின் அமைச்சர்கள், ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் நடந்த சைபுல்லா காலித் மற்றும் தல்ஹா சயீத் பங்கேற்ற பேரணிக்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர் என தெரியவில்லை.