குழந்தை திருமணத்தை தடுக்க பாகிஸ்தானில் சட்டம் அமல்
குழந்தை திருமணத்தை தடுக்க பாகிஸ்தானில் சட்டம் அமல்
குழந்தை திருமணத்தை தடுக்க பாகிஸ்தானில் சட்டம் அமல்
ADDED : மே 31, 2025 04:33 AM

இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில், பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, 18 வயதுக்கு உட்பட்டோரின் திருமணத்தை தடுக்கும் மசோதா, சமீபத்தில் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த 27-ல், அதிபர் ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தை திருமணத்தை தடுக்கும் மசோதாவுக்கு, பாக்., அதிபர் ஆசிப் அலி சர்தாரி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து, பாக்., மக்கள் கட்சி எம்.பி., ஷெர்ரி ரெஹ்மான் கூறியதாவது:
பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை மீறி, இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேச குழந்தை திருமண தடை மசோதா - 2025க்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்தார். குழந்தை திருமணத்துக்கு எதிரான போரில், இது ஒரு முக்கிய மைல்கல். இந்த மசோதா வெறும் சட்டம் மட்டுமல்ல, நம் பெண்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வளமான வாழ்க்கைக்கான உரிமை உள்ளது என்பதற்கான உறுதிமொழி. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புதிய சட்டத்தின்படி, ஆண் - பெண் திருமண வயது, 18 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, எந்தவொரு மத அதிகாரியும், 18 வயதுக்குட்பட்டோருக்கு திருமணத்தை நடத்தி வைக்கக் கூடாது. மீறினால், ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை மணந்தால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.